பாகம் – 4
சு: என்னடா யாப்புக்குள்ள போகலாம்னு சொல்லிட்டு அப்புறமா ஆளையே காணோம்.ரா: மாப்ள, ஆஃபீஸ் வேலை, குடும்ப பாரம், அப்புறம் வெக்கேஷன் அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கினதுல உனக்கு யாப்பை சொல்லித்தர மறந்துட்டேன். இப்ப என்னடா? விட்ட இடத்துலேருந்து தொடங்கிட்டாப் போச்சு.
சு: மாத்திரையில விட்ட. அடுத்தது என்னடா?
ரா: நேரா யாப்போட உறுப்புகளுக்குப் போயிடலாம். நாம படிக்கும்போது படம் வரைஞ்சு பாகம் குறிப்போம்ல அது மாதிரிடா.
சு: அப்ப ரொம்ப ஈஸியாப் புரிஞ்சுக்கலாம்னு சொல்லு.
ரா: ஆமாம். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இந்த ஆறும் யாப்போட உறுப்புகள் அப்படின்னு யாப்பிலக்கணம் சொல்லுது. அதுல எழுத்து பத்தி ஏற்கனவே நாம பேசிட்டோம். என்னடா மறுபடியும் புதுசா ஆறு இருக்குங்கிறானேன்னு பயந்துடாத.
சு: யாப்புக்குள்ள நீ வரும்போது இந்த மாப்புக்கென்ன பயம். பொறுமையா கவனிச்சு புரிஞ்சிக்கிறேன்.
ரா: நண்பேண்டா. இந்த ஆர்வத்துக்கு நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவடா. சரி வேகமா எழுத்தையும் இன்னொரு தடவை பார்த்துடலாம். முதலெழுத்துகள்ல: உயிர் – 12, அதுக்குள்ள குறில் – 5, நெடில் – 7; மெய் – 18, வல்லினம் – 6, மெல்லினம் – 6, இடையினம் – 6. சார்பெழுத்துகள் – 10: அதுல முக்கியமானது என்னன்னா: உயிர்மெய் – 216, ஆய்தம் – 1 குற்றியலுகரம். மத்த ஏழு சார்பெழுத்தும் பின்னால படிக்கலாம். குறிலுக்கு 1 மாத்திரை, நெடிலுக்கு 2 மாத்திரைகள், மெய்க்கு ½ மாத்திரை, ஆய்தத்துக்கு ½ மாத்திரை, உயிர் மெய்க்கு எப்பவுமே அதுல இருக்குற உயிரெழுத்தோட மாத்திரைதான் வரும்.
சு: பரீட்சைக்கு ஒரு தடவை வேகமா புரட்டிப் பார்ப்போமே. அது மாதிரி சுருக்கமா அதே நேரத்துல வேகமாவும் சொன்னதுக்கு ரொம்ப நன்றிடா.
ரா: விடுடா. இதெல்லாம் எனக்குப் பெருமையா? கடமைடா கடமை. சரி, இப்போ அசைக்குள்ளப் போகலாம். எழுத்துகள் ஒன்றோ அதுக்கும் மேற்பட்டோ சேர்ந்து இருந்தா அது அசை. எந்த வார்த்தையா இருந்தாலும் அதை நீ அசையா பிரிச்சி மேஞ்சிடலாம்.
சு: அப்படின்னா வார்த்தையத்தான் அசைன்னு சொல்றோமாடா?
ரா: அது அந்த வார்த்தையப் பொறுத்ததுடா. ஒரு வார்த்தைக்குள்ளேயே சில அசைகள் இருக்கலாம். ஒரு வார்த்தையே ஒரு அசையாக்கூட இருக்கலாம். நான் உனக்கு உதாரணம் சொல்லும்போது நல்லாப் புரியும். சரியா?
சு: புரியுற மாதிரி இருக்கு. ஆனாப் புரியாத மாதிரியும் இருக்கு. ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் அன் எக்ஸாம்பிள். நான் ஒரு உதாரணத்துக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.
ரா: தோடா. வந்துட்டாரு மேஜர் சுந்தர்ராஜன். அசையை நேர், நிரை அப்படின்னு ரெண்டாப் பிரிக்கலாம். 1 தனிக்குறில் (அ) 1 தனிக்குறிலுக்குப் பக்கத்துல மெய் (அ) 1 தனிநெடில் (அ) 1 தனிநெடிலுக்குப் பக்கத்துல மெய் வந்தா அது நேரசைன்னு சொல்லுவோம். இப்போ சில வார்த்தைகளை அசை பிரிச்சு உனக்கு விபரமா விளக்குறேண்டா.
சு: சரிடா. அப்படின்னா நேர், நிரை இதெல்லாம் ஒரு காம்பினேஷன் (அ) ஃபார்முலா மாதிரின்னு சொல்லலாமாடா?
ரா: அதேதாண்டா. எழுத்துகள் சேர்ந்து வந்தா அசைன்னு சொன்னேன். நீ அதை காம்பினேஷன்னு சொல்லிக்கணும்னா சொல்லிக்கடா. உனக்கு அது சுலபமா இருந்தா அப்படியே வச்சுக்க. ஒரு வார்த்தையில மெய்யெழுத்துகள் வந்தா அது ரொம்ப வசதிடா. ஏன்னா அந்த மெய்யெழுத்துகளோட ஒரு அசை முடிஞ்சிடும். அசை பிரிக்கும்போது எத்தனை மெய்யெழுத்துகள் இருந்தாலும் மதிப்பு கிடையாது. அது எல்லாத்தையும் அதுக்கு முன்னால இருக்குற எழுத்தோட சேர்த்து அசை பிரிச்சுடுவோம். இப்போ சில வார்த்தைகளப் பார்ப்போம்.
கல் – இந்த வார்த்தைல ‘க’ அப்படிங்கிற 1 தனிக்குறிலுக்குப் பக்கத்துல ’ல்’ அப்படின்னு 1 மெய் இருக்கு. அதனால இது ஒரு அசை அதுவும் நேரசை. நான் சொன்ன மாதிரி இதுல ‘ல்’ அப்படின்னு ஒரு மெய் எழுத்து வந்ததால வசதியா அதோட ஒரு அசையை பிரிச்சிடலாம்.
கால் – இந்த வார்த்தைல ‘கா’ அப்படிங்கிற 1 தனிநெடிலுக்குப் பக்கத்துல ‘ல்’ அப்படின்னு 1 மெய் இருக்கு. அதனால் இது ஒரு அசை அதுவும் நேரசை. இப்பப் புரியுதா?
சு: அருமைடா. கல், கால் இதைத்தான் ஒரு வார்த்தையே கூட அசையா வரலாம்னு சொன்னியா? இப்பப் புரியுதுடா. அப்படியே நிரையசையைப் பத்தியும் சொல்லிடுடா.
ரா: கட்டாயமா. 1 குறிலிணை அதாவது 2 குறில்கள் ஜோடியா வர்றதுதான் இணை (அ) 1 குறிலிணைக்குப் பக்கத்துல மெய் (அ) 1 குறி நெடில் அதாவது 1குறிலை அடுத்து 1 நெடில் வர்றது (அ) 1 குறி நெடிலுக்குப் பக்கத்துல மெய் வந்தா அது நிரையசை. இப்போ சில வார்த்தைகளப் பார்ப்போம்.
கடல் – இந்த வார்த்தைல ‘கட’ அப்படிங்கிற குறிலிணைக்கு ( ‘க’ குறில் ‘ட’ குறில். இந்த இரண்டு குறில்களும் அடுத்தடுத்து ஜோடியா வந்திருக்கிறதால இது குறிலிணை) அடுத்து ‘ல்’ அப்படிங்கிற மெய் எழுத்து வந்ததால இது நிரையசை.
முகாம் - இந்த வார்த்தைல ‘முகா’ அப்படிங்கிற குறிநெடிலுக்கு ( ‘மு’ குறில் ‘கா’ நெடில். ஒரு குறிலுக்குப் பக்கத்துல நெடில் வந்திருக்கிறதால இது குறிநெடில்) அடுத்து ‘ம்’ அப்படிங்கிற மெய் எழுத்து வந்ததால இது நிரையசை.
சு: அடிடா சக்கை. எனக்கு நல்லாப் புரியுதுடா. சரிடா இப்ப ஒரு விளையாட்டு விளையாடலாமா? நம்மளோட பேரையே அசை பிரிக்கட்டுமா? ராஜா – ’ரா’ 1 நெடில் ‘ஜா’ ஒரு நெடில். உன் பேர்ல 2 அசைகள் இருக்கு. அது ரெண்டுமே நேரசைகள். சுப்ரமணி – ‘சுப்’ 1 குறிலுக்குப் பக்கத்துல மெய், ‘ரம’ – குறிலிணை ‘ர’-ங்கிற குறிலுக்குப் பக்கத்துல ‘ம’-ங்கிற குறில் வந்திருக்கிறதால இது குறிலிணை, ‘ணி’ – 1 குறில். என் பேர்ல 3 அசைகள் இருக்கு. 1 நேரசை அடுத்து 1 நிரையசை கடைசியா 1 நேரசை. எப்பூடி?
ரா: அப்படிப் போடுடா. எனக்குப் புல்லரிக்குது. மாடு அசை போடுற மாதிரி மண்டைய ஆட்டிக்கிட்டே இருந்தியே உனக்கு எவ்வளவு புரிஞ்சிருக்குமோன்னு நெனச்சேன். ஆனா நீ அட்டகாசமா நம்ம ரெண்டு பேர் பேரையும் அசை பிரிச்சு அசத்திட்டேடா.
சு: கெடச்ச கேப்ல என்னை மாடுன்னு சொல்லிட்ட. பரவாயில்லடா. அடிக்கிற கைதான் சொல்லியும் குடுக்கும்.
ரா: மாப்ள, ‘மாடு’ன்னா தமிழ்ல செல்வம் அப்படின்னு கூட ஒரு அர்த்தம் இருக்குடா. உனக்குத் தமிழ்ச் செல்வம் பெருகிடுச்சுன்னு சொல்லலாம்ல.
சு: எதுக்கு இப்படி சமாளிக்கிற. எப்போ மத்த உறுப்புகளை சொல்லித் தரப்போற?
ரா: அடுத்த தடவை நாம் சந்திக்கிறப்ப சீர், அடி, தளை மூணும் சொல்லித்தர்றேன்.
சு: சரிடா.