Friday, January 29, 2016

வெண்பா உரையாடல் - பாகம் 1

”வெண்பா வடிக்கலாம் வா” முகநூல் பக்கத்தில், நகைச்சுவையாய் வெண்பாக்கள் எழுதுவதே எங்கள் குறிக்கோள். அதனால், வெண்பா இலக்கணத்தையே நகைச்சுவாய் பேச்சுத் தமிழில் விளக்கினால் என்ன எனத்தோன்றியதன் விளைவுதான் இந்த ”வெண்பா உரையாடல்” தொடர். இது ஒன்றும் புதிய முயற்சியல்ல. ஏற்கனவே இணையத்தில் பலர் இம்முறையில் வெண்பாவை சொல்லித்தர முயன்றுள்ளார்கள். அதனால் இந்த முறையை நான் கண்டுபிடித்தேன் எனச்சொல்லிப் பெயர் வாங்குவது என் எண்ணமல்ல. ஆனால், வெண்பா எழுத யாப்பிலக்கணம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படுத்த வெண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தொடரை எழுதுகிறேன்.

முன்னுரை:

சுப்ரமணியும் ராஜாவும் நண்பர்கள். சுப்ரமணிக்கு புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். ராஜாவுக்கு மரபுக்கவிதை எழுதுவதில் அலாதி ஆர்வம். சுப்ரமணிக்கு வெண்பா எழுத வேண்டுமென்று ஆர்வம் வந்ததால் ராஜாவிடம் வெண்பா இலக்கணத்தை எளிமையாக சொல்லித்தர இயலுமா என்று கேட்டான். ராஜாவும் நண்பனின் கவிதை ஆர்வத்தையும் திறமையையும் நன்கறிந்தவனென்பதால் ஒப்புக்கொண்டான். இனி இவர்களிருவரின் உரையாடலைப் பார்ப்போம்.

பாகம் - 1

சு: மாப்ள எனக்கு மரபுக்கவிதை எழுதணும்னு ஆசை ஆசையா இருக்கு. ஆனா எழுதும்போதுதான் இந்தத் தளை தட்டுது.
ரா: டேய் உனக்கு என்ன குணான்னு நெனப்பா? நேரா விஷயத்துக்கு வாடா.
சு: வெண்பா விதிகள்னு கூகுள்ல தட்டுனா அசை, சீரு ஆப்பு அது இதுன்னு வந்தா எழுதுறவன் கூட எழுத பயப்படுவானா இல்லையா?
ரா: அடேய் அது ஆப்பு இல்லடா யாப்பு
சு: ஆம் அதுதான் அதேதான் கரெக்ட்டு
ரா: ஏண்டா நமக்குப் புரியாத வேற்று மொழியான இங்கிலீஷ் கிராமரை எல்லாம் கத்துக்கிறோம். ஆனா நாம பேசுற தாய்மொழியில எழுதுறதுக்கு ஒழுங்கா இலக்கணம் படிக்க ஒனக்குக் கஷ்டமாயிருக்கு அப்படிதானே?
சு: ஆமாண்டா. நம்ம தமிழ் படிச்ச காலத்துல இலக்கணம் அப்படின்னாலே எஸ்கேப் ஆயிடுவோம். அது இப்ப வந்து இடிக்குது.
ரா: அதுவும் சரிதாண்டா. என்னமோ சுலபமா கத்துக் குடுத்தா நாமெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பராயிடுவோம்னு நம்ம தமிழ் வாத்தியாருங்க நமக்குப் புரியாத மாதிரியே சொல்லி வச்சிட்டாங்க. ரொம்பக் கேள்வி கேட்டா கோனார் நோட்சைக் கையிலக் குடுத்துட்டாங்க. சரி விடு. இப்ப மேட்டருக்கு வருவோம்.
சு: மச்சி கவுண்டமணி டயலாக் சொல்லிக் கலாய்ச்சா மட்டும் போதாது. எனக்கு சுலபமா புரியிற மாதிரி வெண்பா இலக்கணம் சொல்லிக்குடுப்பியா?
ரா: முயற்சி பண்றேன். வெண்பா எழுதறதுக்கு முன்னாடி தமிழ்ல இலக்கண வகைகள் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க. மொத்தம் 5 இருக்கு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
சு: இரு இரு. என்ன எடுத்தவுடனேயே பயமுறுத்துறியே. அஞ்சையும் படிச்சாதான் வெண்பா எழுத முடியும்னா, நா இப்பவே ஜீட் விடுறேன்.
ரா. டேய் கொஞ்சம் இருடா. சினிமா சான்ஸ் கேக்கப் போறப்பயே முதலமைச்சர் நாற்காலியில ஒக்கார்றதுக்கு இது என்ன சினிமாப் பாட்டுல வர்ற சீனாடா? அந்த மாதிரி பாட்டு சீன்லதாண்டா ஒரே பாட்டுல மாடு மேய்ச்ச ஹீரோ பாட்டு முடிய சொல்லோ ஸ்டார் ஹோட்டல் எல்லாம் கட்டுவாரு. இலக்கணம் படிக்கக் கொஞ்சம் நேரம் எடுக்கும்டா. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்தாதானடா பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கும். நேரா மாடியையேக் கட்டுவேன்னா என்னடா அர்த்தம்?
சு: சாரி மச்சி. 5 கொஞ்சம் அதிகம்டா.
ரா: எழுத்து, சொல் இலக்கணத்தோட அடிப்படை மட்டும் தெரிஞ்சா போதும்டா. நேரா யாப்புக்குள்ள போயி நாம வெண்பா எழுதிடுலாம். ஓகேவா? எதப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணணும்டா. அச்சக் லொச்சக் டொச்சக், காசு பணம் துட்டு மணி மாதிரி எழுத்து சொல்லு யாப்பு மாப்பு புரியுதா?
சு: இப்புடி சொன்னா கொஞ்சம் ஈஸியாயிருக்குடா.

No comments:

Post a Comment