Friday, January 29, 2016

வெண்பா உரையாடல் - பாகம் 3


பாகம் – 3

ரா: சுப்ரமணி நாம போன தடவை சந்திச்சப்ப எழுத்து இலக்கணம் பத்திப் பேசினோம். அப்ப உன் கிட்ட எழுத்தோட ஒலி அளவைப் பத்தி சொல்லணும்னு நினைச்சேன். எழுத்தை உச்சரிக்க நாம எடுத்துக்குற நேரத்தை மாத்திரைன்னு சொல்வாங்க
சு: என்னது மாத்திரையா? என்னடா இலக்கணம் சொல்லித்தாடான்னா மருத்துவத்துக்குப் போயிட்ட.
ரா: இந்த மாதிரி மொக்கை ஜோக்கெல்லாம் அடிக்கப்படாது. கண் சிமிட்டுற நேரத்தையோ அல்லது கை சொடுக்குற நேரத்தையோ ஒரு மாத்திரைன்னு சொல்லலாம். குறிலுக்கு 1 மாத்திரை, நெடிலுக்கு 2 மாத்திரை மெய்யெழுத்து ½ மாத்திரை ஆய்த எழுத்து ½ மாத்திரை. மெய்யெழுத்த ஒற்று எழுத்துன்னும் சொல்லலாம். சரி இப்ப நாம சார்பு எழுத்துக்குள்ள போலாம்.
சு: அப்பாடா ஒரு வழியா முதல் எழுத்துகளை முடிச்சிட்ட.
ரா: சார்பு எழுத்துகள்ல 10 வகைகள் இருக்குடா. எல்லாத்தோட பேரை மட்டும் இப்போதைக்கு தெரிஞ்சு வச்சுக்க. வெண்பா எழுதும்போது எது எதெல்லாம் அடிக்கடி பயன்படுமோ அப்பப்போ அந்த சார்பு எழுத்துகளை மட்டும் விளக்கமா சொல்லித் தர்றேன்.
சு: அப்படியே ஆகட்டும் மச்சி.
ரா: உயிர் மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், 4 குறுக்கங்கள் (ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்) இதுதான் சார்பு எழுத்து வகைகள். என்ன கண்ணைக் கட்டுதா?
சு: கட்டுற மாதிரி இருந்திச்சு. ஆனால், நீதான் முன்னாலேயெ எல்லாத்தையும் இப்பவே விளக்கமாப் பார்க்க வேணாம்னு சொல்லிட்டியே. அதனால கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கேன்.
ரா: உயிர் மெய், ஆய்தம் அது ரெண்டுமே ஈஸிதான். உயிர் + மெய் = உயிர் மெய். இன்னைக்கு மாத்திரை பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னேன்ல. ஞாபகம் இருக்கா?
சு: நல்லாவே ஞாபகம் இருக்கு.
ரா: நல்லது. உயிர் மெய்க்கு மாத்திரை அந்த உயிர் எழுத்தோட மாத்திரை அளவுதான் வரும். ஒரு சாம்பிள் பார்க்கலாம். ’கு’ அப்படிங்கிற உயிர் மெய்யை க் + உ அப்படின்னு பிரிக்கலாமில்லையா. அதுக்கு எவ்வளவு மாத்திரைன்னு சொல்லு.
சு: இது என்ன பெரிய கணக்கா? க் - மெய்யெழுத்து ½ மாத்திரை, உ - குறில் அதனால 1 மாத்திரை, மொத்தம் 1½ மாத்திரை. நாங்கள்லாம் கணக்குல பின்னுவோம்ல.
ரா: அடேய், 1 + ½ = 1½ அப்படிங்கிற கணக்கெல்லாம் சரிதான். ஆனால், நான் என்ன சொன்னேங்கிறதையே காதுல வாங்காம இப்படித் தப்புத்தப்பாக் கணக்கு போட்டு 7½ யைக் குடுக்காதடா. இன்னொரு தடவை சொல்றேன். நல்லாக் கேட்டுக்க. உயிர் மெய்க்கு மாத்திரை அந்த உயிர் எழுத்தோட மாத்திரை அளவுதான் வரும். இப்ப சொல்லு ‘கு’-க்கு எவ்வளவு மாத்திரை?
சு:. ஓஹோ. சாரிடா. ஆமா என்ன நடந்திச்சு? உயிர் மெய் எழுத்துல உயிரோட மாத்திரை மட்டும்தான் கணக்குல எடுக்கணும்னு சொன்ன. நானும் கேட்டேன். அப்புறம்.. அப்புறம்…
ரா: டேய் நிறுத்துடா. என்ன மெடுலா ஆப்ளங்கேட்டானு காமெடி பண்றீங்களோ? நடுவுல கொஞ்சம் இலக்கணத்தைக் காணும்னு நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்.
சு: சும்மா ஜாலிக்குடா. கோவிச்சுக்காத. கு-வுக்கு 1 மாத்திரை. க் + உ அப்பிடின்னு பிரிச்சாலும் ‘க்’ அதாவது மெய்யோட ½ மாத்திரை கணக்குல வராது. அதாவது கருப்புப் பணம் மாதிரி. உ - குறில் 1 மாத்திரை. அதுனால கு-வுக்கு 1 மாத்திரை. எப்பூடி?
ரா: கலக்கிட்ட போ. சரி ஆய்த எழுத்துன்னா ’அக்’ அப்பிடின்னு உனக்குத் தெரியும். அதுக்கு ½ மாத்திரைதான்னு முன்னாலேயே சொல்லியிருக்கேன். மீதியிருக்குற சார்பு எழுத்துகள்ல குற்றியலுகரம் மட்டும் வெண்பாவுக்கு ரொம்ப தேவைப்படும். யாப்பு இலக்கணம் பத்திப் பேசும்போது உனக்கு குற்றியலுகரம் பத்தி விளக்கமா சொல்றேன்.
சு: சரி எழுத்து இலக்கணம் இதுவரைக்கும் படிச்சதை வச்சு வெண்பா எழுதிடலாமா? சொல் இலக்கணம் வேணாமா?
ரா: நீ சொன்னது ஓரளவுக்கு கரெக்ட்டுதான். இப்போ நாம நேரா யாப்புக்கு போயிடலாம்.
சு: அப்படிப் போடு

No comments:

Post a Comment