Friday, January 29, 2016

வெண்பா உரையாடல் - பாகம் 4


பாகம் – 4

சு: என்னடா யாப்புக்குள்ள போகலாம்னு சொல்லிட்டு அப்புறமா ஆளையே காணோம்.
ரா: மாப்ள, ஆஃபீஸ் வேலை, குடும்ப பாரம், அப்புறம் வெக்கேஷன் அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கினதுல உனக்கு யாப்பை சொல்லித்தர மறந்துட்டேன். இப்ப என்னடா? விட்ட இடத்துலேருந்து தொடங்கிட்டாப் போச்சு. 
சு: மாத்திரையில விட்ட. அடுத்தது என்னடா?
ரா: நேரா யாப்போட உறுப்புகளுக்குப் போயிடலாம். நாம படிக்கும்போது படம் வரைஞ்சு பாகம் குறிப்போம்ல அது மாதிரிடா.
சு: அப்ப ரொம்ப ஈஸியாப் புரிஞ்சுக்கலாம்னு சொல்லு.
ரா: ஆமாம். எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை இந்த ஆறும் யாப்போட உறுப்புகள் அப்படின்னு யாப்பிலக்கணம் சொல்லுது. அதுல எழுத்து பத்தி ஏற்கனவே நாம பேசிட்டோம். என்னடா மறுபடியும் புதுசா ஆறு இருக்குங்கிறானேன்னு பயந்துடாத.
சு: யாப்புக்குள்ள நீ வரும்போது இந்த மாப்புக்கென்ன பயம். பொறுமையா கவனிச்சு புரிஞ்சிக்கிறேன். 
ரா: நண்பேண்டா. இந்த ஆர்வத்துக்கு நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவடா. சரி வேகமா எழுத்தையும் இன்னொரு தடவை பார்த்துடலாம். முதலெழுத்துகள்ல: உயிர் – 12, அதுக்குள்ள குறில் – 5, நெடில் – 7; மெய் – 18, வல்லினம் – 6, மெல்லினம் – 6, இடையினம் – 6. சார்பெழுத்துகள் – 10: அதுல முக்கியமானது என்னன்னா: உயிர்மெய் – 216, ஆய்தம் – 1 குற்றியலுகரம். மத்த ஏழு சார்பெழுத்தும் பின்னால படிக்கலாம். குறிலுக்கு 1 மாத்திரை, நெடிலுக்கு 2 மாத்திரைகள், மெய்க்கு ½ மாத்திரை, ஆய்தத்துக்கு ½ மாத்திரை, உயிர் மெய்க்கு எப்பவுமே அதுல இருக்குற உயிரெழுத்தோட மாத்திரைதான் வரும்.
சு: பரீட்சைக்கு ஒரு தடவை வேகமா புரட்டிப் பார்ப்போமே. அது மாதிரி சுருக்கமா அதே நேரத்துல வேகமாவும் சொன்னதுக்கு ரொம்ப நன்றிடா.
ரா: விடுடா. இதெல்லாம் எனக்குப் பெருமையா? கடமைடா கடமை. சரி, இப்போ அசைக்குள்ளப் போகலாம். எழுத்துகள் ஒன்றோ அதுக்கும் மேற்பட்டோ சேர்ந்து இருந்தா அது அசை. எந்த வார்த்தையா இருந்தாலும் அதை நீ அசையா பிரிச்சி மேஞ்சிடலாம்.
சு: அப்படின்னா வார்த்தையத்தான் அசைன்னு சொல்றோமாடா?
ரா: அது அந்த வார்த்தையப் பொறுத்ததுடா. ஒரு வார்த்தைக்குள்ளேயே சில அசைகள் இருக்கலாம். ஒரு வார்த்தையே ஒரு அசையாக்கூட இருக்கலாம். நான் உனக்கு உதாரணம் சொல்லும்போது நல்லாப் புரியும். சரியா?
சு: புரியுற மாதிரி இருக்கு. ஆனாப் புரியாத மாதிரியும் இருக்கு. ஐ ஆம் வெய்ட்டிங் ஃபார் அன் எக்ஸாம்பிள். நான் ஒரு உதாரணத்துக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்.
ரா: தோடா. வந்துட்டாரு மேஜர் சுந்தர்ராஜன். அசையை நேர், நிரை அப்படின்னு ரெண்டாப் பிரிக்கலாம். 1 தனிக்குறில் (அ) 1 தனிக்குறிலுக்குப் பக்கத்துல மெய் (அ) 1 தனிநெடில் (அ) 1 தனிநெடிலுக்குப் பக்கத்துல மெய் வந்தா அது நேரசைன்னு சொல்லுவோம். இப்போ சில வார்த்தைகளை அசை பிரிச்சு உனக்கு விபரமா விளக்குறேண்டா.
சு: சரிடா. அப்படின்னா நேர், நிரை இதெல்லாம் ஒரு காம்பினேஷன் (அ) ஃபார்முலா மாதிரின்னு சொல்லலாமாடா?
ரா: அதேதாண்டா. எழுத்துகள் சேர்ந்து வந்தா அசைன்னு சொன்னேன். நீ அதை காம்பினேஷன்னு சொல்லிக்கணும்னா சொல்லிக்கடா. உனக்கு அது சுலபமா இருந்தா அப்படியே வச்சுக்க. ஒரு வார்த்தையில மெய்யெழுத்துகள் வந்தா அது ரொம்ப வசதிடா. ஏன்னா அந்த மெய்யெழுத்துகளோட ஒரு அசை முடிஞ்சிடும். அசை பிரிக்கும்போது எத்தனை மெய்யெழுத்துகள் இருந்தாலும் மதிப்பு கிடையாது. அது எல்லாத்தையும் அதுக்கு முன்னால இருக்குற எழுத்தோட சேர்த்து அசை பிரிச்சுடுவோம். இப்போ சில வார்த்தைகளப் பார்ப்போம். 
கல் – இந்த வார்த்தைல ‘க’ அப்படிங்கிற 1 தனிக்குறிலுக்குப் பக்கத்துல ’ல்’ அப்படின்னு 1 மெய் இருக்கு. அதனால இது ஒரு அசை அதுவும் நேரசை. நான் சொன்ன மாதிரி இதுல ‘ல்’ அப்படின்னு ஒரு மெய் எழுத்து வந்ததால வசதியா அதோட ஒரு அசையை பிரிச்சிடலாம்.
கால் – இந்த வார்த்தைல ‘கா’ அப்படிங்கிற 1 தனிநெடிலுக்குப் பக்கத்துல ‘ல்’ அப்படின்னு 1 மெய் இருக்கு. அதனால் இது ஒரு அசை அதுவும் நேரசை. இப்பப் புரியுதா?
சு: அருமைடா. கல், கால் இதைத்தான் ஒரு வார்த்தையே கூட அசையா வரலாம்னு சொன்னியா? இப்பப் புரியுதுடா. அப்படியே நிரையசையைப் பத்தியும் சொல்லிடுடா.
ரா: கட்டாயமா. 1 குறிலிணை அதாவது 2 குறில்கள் ஜோடியா வர்றதுதான் இணை (அ) 1 குறிலிணைக்குப் பக்கத்துல மெய் (அ) 1 குறி நெடில் அதாவது 1குறிலை அடுத்து 1 நெடில் வர்றது (அ) 1 குறி நெடிலுக்குப் பக்கத்துல மெய் வந்தா அது நிரையசை. இப்போ சில வார்த்தைகளப் பார்ப்போம். 
கடல் – இந்த வார்த்தைல ‘கட’ அப்படிங்கிற குறிலிணைக்கு ( ‘க’ குறில் ‘ட’ குறில். இந்த இரண்டு குறில்களும் அடுத்தடுத்து ஜோடியா வந்திருக்கிறதால இது குறிலிணை) அடுத்து ‘ல்’ அப்படிங்கிற மெய் எழுத்து வந்ததால இது நிரையசை. 
முகாம் - இந்த வார்த்தைல ‘முகா’ அப்படிங்கிற குறிநெடிலுக்கு ( ‘மு’ குறில் ‘கா’ நெடில். ஒரு குறிலுக்குப் பக்கத்துல நெடில் வந்திருக்கிறதால இது குறிநெடில்) அடுத்து ‘ம்’ அப்படிங்கிற மெய் எழுத்து வந்ததால இது நிரையசை.
சு: அடிடா சக்கை. எனக்கு நல்லாப் புரியுதுடா. சரிடா இப்ப ஒரு விளையாட்டு விளையாடலாமா? நம்மளோட பேரையே அசை பிரிக்கட்டுமா? ராஜா – ’ரா’ 1 நெடில் ‘ஜா’ ஒரு நெடில். உன் பேர்ல 2 அசைகள் இருக்கு. அது ரெண்டுமே நேரசைகள். சுப்ரமணி – ‘சுப்’ 1 குறிலுக்குப் பக்கத்துல மெய், ‘ரம’ – குறிலிணை ‘ர’-ங்கிற குறிலுக்குப் பக்கத்துல ‘ம’-ங்கிற குறில் வந்திருக்கிறதால இது குறிலிணை, ‘ணி’ – 1 குறில். என் பேர்ல 3 அசைகள் இருக்கு. 1 நேரசை அடுத்து 1 நிரையசை கடைசியா 1 நேரசை. எப்பூடி?
ரா: அப்படிப் போடுடா. எனக்குப் புல்லரிக்குது. மாடு அசை போடுற மாதிரி மண்டைய ஆட்டிக்கிட்டே இருந்தியே உனக்கு எவ்வளவு புரிஞ்சிருக்குமோன்னு நெனச்சேன். ஆனா நீ அட்டகாசமா நம்ம ரெண்டு பேர் பேரையும் அசை பிரிச்சு அசத்திட்டேடா.
சு: கெடச்ச கேப்ல என்னை மாடுன்னு சொல்லிட்ட. பரவாயில்லடா. அடிக்கிற கைதான் சொல்லியும் குடுக்கும்.
ரா: மாப்ள, ‘மாடு’ன்னா தமிழ்ல செல்வம் அப்படின்னு கூட ஒரு அர்த்தம் இருக்குடா. உனக்குத் தமிழ்ச் செல்வம் பெருகிடுச்சுன்னு சொல்லலாம்ல.
சு: எதுக்கு இப்படி சமாளிக்கிற. எப்போ மத்த உறுப்புகளை சொல்லித் தரப்போற?
ரா: அடுத்த தடவை நாம் சந்திக்கிறப்ப சீர், அடி, தளை மூணும் சொல்லித்தர்றேன்.
சு: சரிடா.

வெண்பா உரையாடல் - பாகம் 3


பாகம் – 3

ரா: சுப்ரமணி நாம போன தடவை சந்திச்சப்ப எழுத்து இலக்கணம் பத்திப் பேசினோம். அப்ப உன் கிட்ட எழுத்தோட ஒலி அளவைப் பத்தி சொல்லணும்னு நினைச்சேன். எழுத்தை உச்சரிக்க நாம எடுத்துக்குற நேரத்தை மாத்திரைன்னு சொல்வாங்க
சு: என்னது மாத்திரையா? என்னடா இலக்கணம் சொல்லித்தாடான்னா மருத்துவத்துக்குப் போயிட்ட.
ரா: இந்த மாதிரி மொக்கை ஜோக்கெல்லாம் அடிக்கப்படாது. கண் சிமிட்டுற நேரத்தையோ அல்லது கை சொடுக்குற நேரத்தையோ ஒரு மாத்திரைன்னு சொல்லலாம். குறிலுக்கு 1 மாத்திரை, நெடிலுக்கு 2 மாத்திரை மெய்யெழுத்து ½ மாத்திரை ஆய்த எழுத்து ½ மாத்திரை. மெய்யெழுத்த ஒற்று எழுத்துன்னும் சொல்லலாம். சரி இப்ப நாம சார்பு எழுத்துக்குள்ள போலாம்.
சு: அப்பாடா ஒரு வழியா முதல் எழுத்துகளை முடிச்சிட்ட.
ரா: சார்பு எழுத்துகள்ல 10 வகைகள் இருக்குடா. எல்லாத்தோட பேரை மட்டும் இப்போதைக்கு தெரிஞ்சு வச்சுக்க. வெண்பா எழுதும்போது எது எதெல்லாம் அடிக்கடி பயன்படுமோ அப்பப்போ அந்த சார்பு எழுத்துகளை மட்டும் விளக்கமா சொல்லித் தர்றேன்.
சு: அப்படியே ஆகட்டும் மச்சி.
ரா: உயிர் மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், 4 குறுக்கங்கள் (ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்) இதுதான் சார்பு எழுத்து வகைகள். என்ன கண்ணைக் கட்டுதா?
சு: கட்டுற மாதிரி இருந்திச்சு. ஆனால், நீதான் முன்னாலேயெ எல்லாத்தையும் இப்பவே விளக்கமாப் பார்க்க வேணாம்னு சொல்லிட்டியே. அதனால கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கேன்.
ரா: உயிர் மெய், ஆய்தம் அது ரெண்டுமே ஈஸிதான். உயிர் + மெய் = உயிர் மெய். இன்னைக்கு மாத்திரை பத்தி கொஞ்ச நேரத்துக்கு முன்னால சொன்னேன்ல. ஞாபகம் இருக்கா?
சு: நல்லாவே ஞாபகம் இருக்கு.
ரா: நல்லது. உயிர் மெய்க்கு மாத்திரை அந்த உயிர் எழுத்தோட மாத்திரை அளவுதான் வரும். ஒரு சாம்பிள் பார்க்கலாம். ’கு’ அப்படிங்கிற உயிர் மெய்யை க் + உ அப்படின்னு பிரிக்கலாமில்லையா. அதுக்கு எவ்வளவு மாத்திரைன்னு சொல்லு.
சு: இது என்ன பெரிய கணக்கா? க் - மெய்யெழுத்து ½ மாத்திரை, உ - குறில் அதனால 1 மாத்திரை, மொத்தம் 1½ மாத்திரை. நாங்கள்லாம் கணக்குல பின்னுவோம்ல.
ரா: அடேய், 1 + ½ = 1½ அப்படிங்கிற கணக்கெல்லாம் சரிதான். ஆனால், நான் என்ன சொன்னேங்கிறதையே காதுல வாங்காம இப்படித் தப்புத்தப்பாக் கணக்கு போட்டு 7½ யைக் குடுக்காதடா. இன்னொரு தடவை சொல்றேன். நல்லாக் கேட்டுக்க. உயிர் மெய்க்கு மாத்திரை அந்த உயிர் எழுத்தோட மாத்திரை அளவுதான் வரும். இப்ப சொல்லு ‘கு’-க்கு எவ்வளவு மாத்திரை?
சு:. ஓஹோ. சாரிடா. ஆமா என்ன நடந்திச்சு? உயிர் மெய் எழுத்துல உயிரோட மாத்திரை மட்டும்தான் கணக்குல எடுக்கணும்னு சொன்ன. நானும் கேட்டேன். அப்புறம்.. அப்புறம்…
ரா: டேய் நிறுத்துடா. என்ன மெடுலா ஆப்ளங்கேட்டானு காமெடி பண்றீங்களோ? நடுவுல கொஞ்சம் இலக்கணத்தைக் காணும்னு நான் பாட்டுக்கு போய்க்கிட்டே இருப்பேன்.
சு: சும்மா ஜாலிக்குடா. கோவிச்சுக்காத. கு-வுக்கு 1 மாத்திரை. க் + உ அப்பிடின்னு பிரிச்சாலும் ‘க்’ அதாவது மெய்யோட ½ மாத்திரை கணக்குல வராது. அதாவது கருப்புப் பணம் மாதிரி. உ - குறில் 1 மாத்திரை. அதுனால கு-வுக்கு 1 மாத்திரை. எப்பூடி?
ரா: கலக்கிட்ட போ. சரி ஆய்த எழுத்துன்னா ’அக்’ அப்பிடின்னு உனக்குத் தெரியும். அதுக்கு ½ மாத்திரைதான்னு முன்னாலேயே சொல்லியிருக்கேன். மீதியிருக்குற சார்பு எழுத்துகள்ல குற்றியலுகரம் மட்டும் வெண்பாவுக்கு ரொம்ப தேவைப்படும். யாப்பு இலக்கணம் பத்திப் பேசும்போது உனக்கு குற்றியலுகரம் பத்தி விளக்கமா சொல்றேன்.
சு: சரி எழுத்து இலக்கணம் இதுவரைக்கும் படிச்சதை வச்சு வெண்பா எழுதிடலாமா? சொல் இலக்கணம் வேணாமா?
ரா: நீ சொன்னது ஓரளவுக்கு கரெக்ட்டுதான். இப்போ நாம நேரா யாப்புக்கு போயிடலாம்.
சு: அப்படிப் போடு

வெண்பா உரையாடல் - பாகம் 2


பாகம் – 2

ரா: முதல்ல எழுத்துலேர்ந்து ஆரம்பிக்கிறேன்.
சு: என்ன கிண்டல் பண்றியா? எனக்கு 247 எழுத்துமே நல்லாத் தெரியும்டா
ரா: இப்படி குறுக்கப் பேசாதடா. முதல்ல தமிழ்ல 247 எழுத்துகள்னு சொல்லி எல்லாரையும் பயமுறுத்துறதை நிறுத்துங்கடா. மொத்தமே 31 எழுத்துகள் தாண்டா இருக்கு.
சு: என்னடா புதுக்கதை உடுற?
ரா; கதையில்லடா. உண்மை. உயிர் 12 மெய் 18 ஆய்தம் 1 மொத்தம் 31. வரி வடிவத்தையெல்லாம் ஒலி வடிவமா கணக்குல எடுக்காதே. அப்படின்னா இங்கிலீஷ்ல அப்பர் கேஸ் 26, லோயர் கேஸ் 26 மொத்தம் 52 எழுத்துகள்னு சொன்னா ஒத்துக்குவியா?
சு: மாப்ள, புரியுது ஆனா புரியலை
ரா: என்னடா வரும் ஆனா வராது மாதிரி. ரொம்ப ஈஸியான மேட்டர்டா இது. இப்போ நாம படிக்கறப்போ லை, னை யோட வரி வடிவமெல்லாம் வேற மாதிரி இருந்திச்சிடா. அப்புறமா சுலபமாக்கினாங்க. ஆனால் அந்த உச்சரிப்பு ஒலி மாறலை. இங்கிலீஷ்ல நீ அப்படிங்கறதை nee அப்படின்னு எழுதுற மாதிரி தமிழ்ல ந்ஈ அப்படின்னு எழுதவுட்டா 31 எழுத்துகளை வச்சே நீ எழுதலாம்ல. ஆனா அப்படி விடாம நீ அப்படின்னு ஒரு வரி வடிவத்தை உருவாக்கி வச்சிருக்காங்க.
சு. அட, இதுக்குள்ள இவ்வளவு மேட்டர் இருக்கா.
ரா. சரி அதை விடு. நாம் எழுத்து இலக்கணத்துக்குப் போவோம். 2 விதமா எழுத்துகளைப் பிரிக்கலாம். 1. முதல் எழுத்து 2. சார்பு எழுத்து
சு: மறுபடியும் ஆரம்பிச்சுட்டாண்டா. முதல்ல இலக்கணமே 5 வகைன்னு சொன்னே. ஆனால் 3 தெரிஞ்சுக்கிட்டா போதும்னு சொன்னதால பொறுத்துக்கிட்டேன். இப்ப எழுத்துக்குள்ள 2 வகைன்னா என்னடா?
ரா: டேய், இங்கிலீஷ் கிராமர்ல tenses, voices, noun, verb அப்பிடி இப்பிடின்னு KGலேருந்து படிக்கலை. பொறுமையாக் கேளுடா. எல்லாம் ஈஸியா புரியும். 
சு: சரிடா
ரா: முதல் எழுத்துன்னா நம்ம தமிழ் மொழிக்கு முதலான எழுத்துகள்டா. உயிர் 12, மெய் 18 மொத்தம் 30. உயிர் எழுத்துகளை குறில், நெடில்னு ரெண்டா பிரிக்கலாம். அ, இ, உ, எ, ஒ – குறில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள – நெடில்
சு: அது சரி 5 குறிலுக்கு 5 நெடில்தானே இருக்கணும். அது என்னடா ஐ ஒள அப்படின்னு 2 எக்ஸ்ட்ரா பிட்டு இருக்கு.
ரா: அப்புடிக் கேள்டா. ஐ, ஒள இரண்டும் கூட்டுயிர்கள் எனப்படும். ஐ என்பதை அஇ எனவும் ஒள என்பதை அஒ என்றும் இரு உயிர்களைக் கூட்டி சொல்லலாம். இப்பப் புரியுதா ஏன் 5 குறிலுக்கு 7 நெடில் வருதுன்னு.
சு: சூப்பர்டா. நம்ம மொழிக்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா?
ரா: அதே மாதிரி மெய்யெழுத்துகள் 18-ஐயும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று 3 வகையா பிரிக்கலாம். 
சு. ஆமாம். இதையாவாது அளவா ஆறு ஆறாப் பிரிச்சிருக்கா இல்லை….?
ரா: இந்த நக்கல்தானே வேணாங்கிறது. எட்டு எட்டா மனுஷ வாழ்வைப் பிரிச்சுக்கோன்னு ஒரு பாட்டு வருமே அதை மாதிரி ஆறு ஆறா மெய்யெழுத்தைப் பிரிச்சுக்கோ, அது வல்லினம், மெல்லினம், இடையினும்னு தெரிஞ்சுக்கோ. எப்பூடி?
சு: அட இது நல்லா இருக்கே.
ரா: க் ங் இப்படின்னு சொன்னா ரொம்ப நேரமும் எடுக்கும் கஷ்டமாவும் இருக்கும். அதனால் அதை அகர வரிசையிலே சொல்லிக்கலாம். க ச ட த ப ற – வல்லினம், ங ஞ ண ந ம ன – மெல்லினம், ய ர ல வ ழ ள – இடையினம். அதாவது நாம காதலிக்கிறப்போ மெல்லினமாத் தெரியிற பெண்கள், கல்யாணத்தப்ப இடையினமாகவும் கொஞ்ச வருஷம் போனது வல்லினமாகவும் மாறிடுறாங்கன்னு சொன்னா காமெடியா இருக்கும். 
சு: ஏண்டா என் வீட்டில நான் உதை வாங்கணும்னு உனக்கு எவ்வளவு நாளா ஆசை.
ரா: உன்னை அடிக்க வந்தா அப்படியே பிளேட்டைத் திருப்பிப் போடு. வல்லினமான பசங்கள்லாம் மெல்லினமான பெண்களின் இடையினத்துக்கு அடிமைன்னு ஒரேப் போடாப் போட்டு எஸ்கேப் ஆயிடு.
சு: மாப்ள இப்ப நீ சொன்னது வெண்பா இல்லையே?
ரா: நண்பா அது வெண்பா இல்லடா ஒரு காமெடி வசனம். சரி எனக்கு வீட்லேருந்து வார்னிங் கால் வருது. அப்புறமா நேரம் இருக்கும்போது எழுத்து இலக்கணத்தை கண்டினியூ பண்ணலாம். 
ராஜாவின் மனைவி: ஏய் ராஜா, வீக் எண்ட்ல வீட்டு வேலைய செய்யாம என்ன வெண்பா அது இதுன்னு யாரு கூட வெட்டியா பேசிக்கிட்டு இருக்க. ஓ சுப்ரமணி நீங்கதானா? நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க.
சு: ஹி ஹி பரவாயில்லை விடுங்க. அசை கத்துக்கணும்னா இந்த வசை எல்லாம் கண்டுக்கக்கூடாது.
ரா ம: சுப்ரமணி என்ன சொல்றாரு?
ரா: அது யாப்பு. சரி மாப்பு நீ கெளம்பு.
சு: யாப்பா, மாப்பு உனக்கு சிஸ்டர் கிட்ட இருக்குடா ஆப்பு. அப்புறம் பார்க்கலாம்டா.

வெண்பா உரையாடல் - பாகம் 1

”வெண்பா வடிக்கலாம் வா” முகநூல் பக்கத்தில், நகைச்சுவையாய் வெண்பாக்கள் எழுதுவதே எங்கள் குறிக்கோள். அதனால், வெண்பா இலக்கணத்தையே நகைச்சுவாய் பேச்சுத் தமிழில் விளக்கினால் என்ன எனத்தோன்றியதன் விளைவுதான் இந்த ”வெண்பா உரையாடல்” தொடர். இது ஒன்றும் புதிய முயற்சியல்ல. ஏற்கனவே இணையத்தில் பலர் இம்முறையில் வெண்பாவை சொல்லித்தர முயன்றுள்ளார்கள். அதனால் இந்த முறையை நான் கண்டுபிடித்தேன் எனச்சொல்லிப் பெயர் வாங்குவது என் எண்ணமல்ல. ஆனால், வெண்பா எழுத யாப்பிலக்கணம் கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படுத்த வெண்டுமென்பதற்காகத்தான் இந்தத் தொடரை எழுதுகிறேன்.

முன்னுரை:

சுப்ரமணியும் ராஜாவும் நண்பர்கள். சுப்ரமணிக்கு புதுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். ராஜாவுக்கு மரபுக்கவிதை எழுதுவதில் அலாதி ஆர்வம். சுப்ரமணிக்கு வெண்பா எழுத வேண்டுமென்று ஆர்வம் வந்ததால் ராஜாவிடம் வெண்பா இலக்கணத்தை எளிமையாக சொல்லித்தர இயலுமா என்று கேட்டான். ராஜாவும் நண்பனின் கவிதை ஆர்வத்தையும் திறமையையும் நன்கறிந்தவனென்பதால் ஒப்புக்கொண்டான். இனி இவர்களிருவரின் உரையாடலைப் பார்ப்போம்.

பாகம் - 1

சு: மாப்ள எனக்கு மரபுக்கவிதை எழுதணும்னு ஆசை ஆசையா இருக்கு. ஆனா எழுதும்போதுதான் இந்தத் தளை தட்டுது.
ரா: டேய் உனக்கு என்ன குணான்னு நெனப்பா? நேரா விஷயத்துக்கு வாடா.
சு: வெண்பா விதிகள்னு கூகுள்ல தட்டுனா அசை, சீரு ஆப்பு அது இதுன்னு வந்தா எழுதுறவன் கூட எழுத பயப்படுவானா இல்லையா?
ரா: அடேய் அது ஆப்பு இல்லடா யாப்பு
சு: ஆம் அதுதான் அதேதான் கரெக்ட்டு
ரா: ஏண்டா நமக்குப் புரியாத வேற்று மொழியான இங்கிலீஷ் கிராமரை எல்லாம் கத்துக்கிறோம். ஆனா நாம பேசுற தாய்மொழியில எழுதுறதுக்கு ஒழுங்கா இலக்கணம் படிக்க ஒனக்குக் கஷ்டமாயிருக்கு அப்படிதானே?
சு: ஆமாண்டா. நம்ம தமிழ் படிச்ச காலத்துல இலக்கணம் அப்படின்னாலே எஸ்கேப் ஆயிடுவோம். அது இப்ப வந்து இடிக்குது.
ரா: அதுவும் சரிதாண்டா. என்னமோ சுலபமா கத்துக் குடுத்தா நாமெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பராயிடுவோம்னு நம்ம தமிழ் வாத்தியாருங்க நமக்குப் புரியாத மாதிரியே சொல்லி வச்சிட்டாங்க. ரொம்பக் கேள்வி கேட்டா கோனார் நோட்சைக் கையிலக் குடுத்துட்டாங்க. சரி விடு. இப்ப மேட்டருக்கு வருவோம்.
சு: மச்சி கவுண்டமணி டயலாக் சொல்லிக் கலாய்ச்சா மட்டும் போதாது. எனக்கு சுலபமா புரியிற மாதிரி வெண்பா இலக்கணம் சொல்லிக்குடுப்பியா?
ரா: முயற்சி பண்றேன். வெண்பா எழுதறதுக்கு முன்னாடி தமிழ்ல இலக்கண வகைகள் என்னென்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க. மொத்தம் 5 இருக்கு. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
சு: இரு இரு. என்ன எடுத்தவுடனேயே பயமுறுத்துறியே. அஞ்சையும் படிச்சாதான் வெண்பா எழுத முடியும்னா, நா இப்பவே ஜீட் விடுறேன்.
ரா. டேய் கொஞ்சம் இருடா. சினிமா சான்ஸ் கேக்கப் போறப்பயே முதலமைச்சர் நாற்காலியில ஒக்கார்றதுக்கு இது என்ன சினிமாப் பாட்டுல வர்ற சீனாடா? அந்த மாதிரி பாட்டு சீன்லதாண்டா ஒரே பாட்டுல மாடு மேய்ச்ச ஹீரோ பாட்டு முடிய சொல்லோ ஸ்டார் ஹோட்டல் எல்லாம் கட்டுவாரு. இலக்கணம் படிக்கக் கொஞ்சம் நேரம் எடுக்கும்டா. பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்கா இருந்தாதானடா பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கும். நேரா மாடியையேக் கட்டுவேன்னா என்னடா அர்த்தம்?
சு: சாரி மச்சி. 5 கொஞ்சம் அதிகம்டா.
ரா: எழுத்து, சொல் இலக்கணத்தோட அடிப்படை மட்டும் தெரிஞ்சா போதும்டா. நேரா யாப்புக்குள்ள போயி நாம வெண்பா எழுதிடுலாம். ஓகேவா? எதப் பண்ணாலும் ப்ளான் பண்ணி பண்ணணும்டா. அச்சக் லொச்சக் டொச்சக், காசு பணம் துட்டு மணி மாதிரி எழுத்து சொல்லு யாப்பு மாப்பு புரியுதா?
சு: இப்புடி சொன்னா கொஞ்சம் ஈஸியாயிருக்குடா.

Tuesday, July 10, 2012

விட்டினி மாமலை

விட்டினி என்றதொரு விண்தொடும் மாமலையை
விட்டினி சென்றிடலாம் என்றென எண்ணாமல்
தொட்டிடாமல் சென்றமுறை தொய்ந்த மனம்
விட்டிடாமல் இம்முறை பாங்குடனே திட்டமிட்டு
பாரமது தூக்கல்தா னென்றாலும் ஆர்வமாய்
தூரமது பாராது தூக்கினேன் பாரத்தை
கோரமது காட்டா தியற்கையும் கைகொடுக்க
நேரமது சற்றும் விரயமாக் காமலே
உச்சியைத் தொட்டேனே காண்

Wednesday, June 20, 2012

சொல் இலக்கணம்

சொல் (Word)

ஓர் எழுத்து தனித்து நின்றோ ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகளோடு சேர்ந்தோ பொருள் தந்தால் அது சொல் எனப்படும். சொல்லுக்குப் பதம், கிளவி, மொழி, வார்த்தை என பிற பெயர்களும் உண்டு.

ஓரெழுத்து ஒரு மொழி (One letter word)

ஓர் எழுத்து தனியே நின்று பொருள் தருவது ஓரெழுத்து ஒரு மொழியாகும்.

ஓரெழுத்து ஒரு மொழியும் அதன் பொருள்களும்

கீழ்க்கண்ட ஓரெழுத்து ஒரு மொழியில் நடைமுறையில் நாம் பயன்படுத்தும் கை, தீ, தை, நீ, வா, மை, வை, பூ, பை, போ போன்ற சில சொற்களைத் தவிர்த்து பெரும்பாலானவை பாக்களில் பயன்படுத்தக்கூடியவை.

– எட்டு, அழகு சிவன்
– பசு, ஆன்மா, எருது
– ½-யின் தமிழ் வடிவம்
– ஈதல், கொடுத்தல், பறக்கும் பூச்சி
– சிவன், ஆச்சர்யம், இரண்டு
– ஊன், இறைச்சி, உணவு
– வினா எழுத்து, ஏழு
– அம்பு, வினாப் பெருக்கம், இறுமாப்பு
– தலைவன், அரசன், வியப்பு, ஆசான்
– மகிழ்ச்சி, வியப்பு, மதகுப்பலகை
ஒள – உலகம், ஆனந்தம்
– கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா – சோலை, காத்தல், காவல்
கி – இறைச்சல் ஒலி
கு – பூமி, உலகம், குற்றம்
கூ – பூமி, உலகம், கூகை
கை – உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை
கோ – அரசன், தலைவன், பசு, இறைவன்
கெள – கொள்ளு, தீங்கு, பற்று
சா – சாதல், இறத்தல், சோர்தல்
சி/சீ – இகழ்ச்சி, இலக்குமி, வெறுப்பு
சு – விரட்டுதல், சுகம், மங்களம்
சே – எருது, சிகப்பு, மரம்
சை – கைப்பொருள், அருவெருப்பு, ஒலி
தா – தருதல், கொடுத்தல், கேடு
தீ – நெருப்பு, சினம், தீமை, நரகம்
து – உண், அசைதல், உணவு
தூ – வெண்மை, தூய்மை, பகைமை
தே – தெய்வம், கடவுள், அருள்
தை – மாதம், தைத்தல், அலங்காரம்
நா – நாக்கு, நடு, அயலர்
நீ – முன்னிலை
நே - அன்பு, அருள், நேயம்
நை - நைதல், வருந்துதல்
நொ/நோ - துன்பம், நோய்
– நூறு
பா - பாட்டு, அழகு, பாதுகாப்பு
பி - அழகு, பிறவினை விகுதி
பீ - பெருமரம், மலம்
பூ - மலர், பூமி, பிறப்பு
பே - நுரை, மேகம், அச்சம்
பை - பசுமை, கைப்பை, இளமை (பையன்)
போ - போதல், செல்லுதல்
- சந்திரன், சிவன்
மா - பெரிய, விலங்கு, மேன்மை, மாமரம்
மீ - மேலே, உச்சி, ஆகாயம்
மூ - மூப்பு, முதுமை, மூன்று
மே - அன்பு, மேன்மை, மாதம், மேலே
மை - அஞ்சனம், கண்மை, இருள், மலடு
மோ - மோத்தல், முகர்தல்
- தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா - யாத்தல், யாக்கை, ஒரு வகை மரம்
- கால் பாகம்
வா - வருதல், தாவுதல், உண்டாக்குதல்
வி - அறிவு, நிச்சயம், ஆகாயம்
வீ - மலர், விரும்புதல், பறவை
வை - கூர்மை, வைத்தல், வைக்கோல்
வௌ -கைப்பற்று, ஒலிக்குறிப்பு, திருகு

எழுத்துத் தொடர்மொழி

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துகள் சேர்ந்து நின்று பொருள் தந்தால் அது எழுத்துத் தொடர்மொழி எனப்படும்.

எ.கா.: புலி, மனிதன், காடு, வீடு

நிலைமொழி, வருமொழி

இரண்டு சொற்கள் இணையும்போது, முதலில் இருக்கும் சொல் நிலைமொழி ஆகும். அதை அடுத்து வரும் சொல் வருமொழி ஆகும்.

எ.கா.: இலக்கணம் + கற்போம் = இலக்கணம் கற்போம்

‘இலக்கணம்’ – நிலைமொழி
‘கற்போம்’ - வருமொழி

Wednesday, June 13, 2012

எழுத்துப்போலி

ஒரு சொல்லின் முதலிலோ, நடுவிலோ, இறுதியிலோ ஓர் எழுத்திற்குப் பதிலாக மற்றோர் எழுத்து வந்து பொருள் மாறாமல் உணர்த்துவது எழுத்துப் போலி எனப்படும். ’போலி’ என்றால் ‘போல நிற்பது’ என்று பொருள்.

வகைகள்

1. முதற்போலி
2. இடைப்போலி
3. கடைப்போலி

முதற்போலி

ஒரு சொல்லின் முதல் எழுத்திற்குப் பதில் வேறு எழுத்து வருவது முதற்போலி ஆகும்.

சல் – பைசல்
ஞ்சு – மைஞ்சு
யல் – மையல்

இந்த சொற்களில் ‘அ’கரத்திற்குப் (ப, ம) போலியாக ‘ஐ’காரம் (பை, மை) வந்திருக்கின்றன.

இடைப்போலி

ஒரு சொல்லின் இடையில் ஓர் எழுத்திற்குப் பதில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.

யர் – அரையர்
ஞ்சி – இலைஞ்சி

இந்த சொற்களில் ‘அ’கரத்திற்குப் (ப, ம) போலியாக ‘ஐ’காரம் (பை, மை) வந்திருக்கின்றன.

கடைப்போலி

ஒரு சொல்லின் இறுதியில் ஓர் எழுத்திற்குப் பதில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.

நலம் – நலன்
நிலம் – நிலன்

இந்த சொற்களில் ‘ம’கர ஒற்றுக்குப் (ம்) போலியாக ‘ன’கர ஒற்று (ன்) வந்திருக்கின்றன.

முற்றுப்போலி

ஒரு சொல்லின் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் வேறுபட்டிடுப்பினும் பொருள் மாறாமல் வந்தால் முற்றுப்போலி ஆகும்.

ஐந்து – அஞ்சு

ஐந்து எனும் சொல்லில் முதல், இடை, கடை என அனைத்து எழுத்துகளும் மாறினாலும் (ஐ – அ, ந் – ஞ், து – சு) ‘ஐந்து’ என்ற பொருளையேக் குறிக்கிறது.

முன் பின்னாகத் தொக்க போலி ஒரு சொல்லில் எழுத்துகல் முன் பின்னாக் மாறி நின்றபோதும், பொருள் மாறாமல் வந்தால் முன் பின்னாகத் தொக்க போலி ஆகும்.

தசை - சதை

இத்துடன் எழுத்து இலக்கணம் நிறைவுற்றது. இனி வரும் நாட்களில் சொல் இலக்கணம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இன எழுத்துகள்

ஓர் எழுத்து தான் பிறக்கும் இடம், ஒலிக்கும் முயற்சி, ஒலிக்கும் நேரம் இவற்றில் ஒன்றால், மற்றோர் எழுத்தை ஒத்திருப்பின் அவை இன எழுத்துகள் ஆகும்.

1. உயிர் – குறிலுக்கு அவற்றின் நெடில் இனமாகும். அ-ஆ, இ-ஈ, உ-ஊ, எ-ஏ
2. ஐ-க்கு இ-யும், ஒள-க்கு உ-வும் இன எழுத்தகளாகும். ஐ, ஒள ஆகிய இரண்டும் கூட்டுயிராகும். ஐ = அஇ, ஒள = அஉ
3. வல்லின எழுத்து ஒவ்வொன்றிற்கும், அதனையடுத்துள்ள மெல்லின எழுத்து இனமாகும். க்-ங், ச்-ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன்
4. உயிர்மெய் எழுத்துகளும் இவ்வகை அமைப்புப் பெற்றவை. க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம, ற-ன
5. இடையின மெய்யெழுத்துகள் ஆறும் ஒரே இனம் கொண்டவை. ய், ர், ல், வ், ழ், ள்.

Tuesday, June 12, 2012

மொழி முதல், இறுதி எழுத்துகள்

மொழி முதல் எழுத்துகள்

ஒரு சொல்லின் தொடக்கத்தில் எந்த எந்த எழுத்துகள் வரலாமோ அவையே மொழி முதல் எழுத்துகள் ஆகும்.

1. உயிர் எழுத்துகள் – 12
2. க, ச, த, ந, ப, ம இவற்றின் வர்க்க எழுத்துகள்(கா,சா,.., கி, சி,…)
3. வ, ய, ஞ இவற்றின் வர்க்க எழுத்துகள். ஆனால், சில விதி விலக்குகள் இருக்கின்றன. வு, வூ, வொ, வோ, யி, யீ, யெ, யே, யை, யொ, ஞீ, ஞூ, ஞை, ஞோ, ஞெள – இவை சொல்லின் முன் வராது.
4. ங மட்டும் வரும்

மொழி முதல் வராத எழுத்துகள்

1. தனி மெய்யெழுத்துகள் – 18
2. உயிர்மெய் எழுத்துகள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன இவற்றின் வர்க்க எழுத்துகள், ஃ

சொல்லின் இறுதி எழுத்துகள்

ஒரு சொல்லின் இறுதியில் (கடைசியில் அல்லது ஈற்றில்) எந்த எந்த எழுத்துகள் வரலாமோ அவையே சொல்லின் இறுதி எழுத்துகள்.

1. உயிர் எழுத்துகள் – ‘எ’ தவிர பிற உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய்யாக சொல்லின் இறுதியில் வரும்.
2. மெய் எழுத்துகள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்
சொல்லின் இறுதியில் வராத எழுத்துகள்

1. உயிர் எழுத்துகள் – எ
2. மெய் எழுத்துகள் – க், ச், ட், த், ப், ற் ஆகிய 6 வல்லின மெய் எழுத்துகள். ங் என்னும் மெல்லின மெய் எழுத்து

வினா எழுத்து

வினாப் பொருளைக் காட்டும் எழுத்து வினா எழுத்து ஆகும்.

1. எ, ஏ, ஆ, ஓ, யா. இவற்றில் எ, யா – சொல்லுக்கு முன்பும், ஆ, ஓ – சொல்லுக்கு இறுதியிலும், ஏ – சொல்லுக்கு முன்பும் இறுதியிலும் வந்து வினாப் பொருளைக் காட்டும்.
எ.கா.: சொல்லின் முதல்: வன்? யாது?
சொல்லின் இறுதி: அவனா (ன் + )? அவளோ (ள் + )?
சொல்லின் முதலிலும், இறுதியிலும்: து? இவன்தானே (ன் + ) அடித்தான்?


வகைகள்

1. அக வினா
2. புற வினா

அக வினா

சொல்லின் உள்ளே நின்று வினாப் பொருள் தந்தால் அக வினா ஆகும். அந்த வினா எழுத்தை நீக்கினால் சொல்லுக்கு பொருள் இராது.
எ.கா.: யார்? து? ன்?

புற வினா

சொல்லின் வெளியே நின்று வினாப் பொருள் தந்தால் புற வினா ஆகும். அந்த வினா எழுத்தை நீக்கினாலும் சொல்லுக்கு பொருள் இருக்கும்.
எ.கா. அவனா (ன் + )? இவன்தானே (ன் + )? ப்புத்தகம்?

சுட்டு எழுத்துகள்

ஒரு பொருளைச் சுட்டிக் காட்டப் பயன்படும் எழுத்து சுட்டு எழுத்து ஆகும். அவை, அ, இ, உ என்பன. இவற்றை முச்சுட்டு என்பார்கள். இவற்றில் ‘உ’ செய்யுளில் மட்டுமே வரும்.

வகைகள்

1. அகச்சுட்டு
2. புறச்சுட்டு

அகச்சுட்டு

சொல்லின் உள்ளே நின்று பொருள் தந்தால் அகச்சுட்டு ஆகும். அந்த சுட்டு எழுத்தை நீக்கினால் சொல்லுக்கு பொருள் இராது.
எ.கா.: அவன், அவள், அது

புறச்சுட்டு

சொல்லின் வெளியே நின்று பொருள் தந்தால் புறச்சுட்டு ஆகும். அந்த சுட்டு எழுத்தை நீக்கினாலும் சொல்லுக்கு பொருள் இருக்கும்.
எ.கா. அப்புத்தகம், இந்நூல், அப்பெட்டி

அண்மைச்சுட்டு

தன் அருகில் உள்ள பொருளைச் சுட்டும் எழுத்து அண்மைச்சுட்டு.
எ.கா.: இவர், இவள், இவன், இது, இவை

சேய்மைச்சுட்டு

தனக்குத் தொலைவில் உள்ள பொருளைச் சுட்டும் எழுத்து சேய்மைச் சுட்டு.
எ.கா.: அவர், அவள், அது, அவை

சுட்டுத் திரிபு

அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து வழங்குவது சுட்டுத் திரிபு ஆகும்.
எ.கா.: அந்தப் பெண், இந்த விலங்கு

Wednesday, May 2, 2012

குறுக்கம்

எழுத்துகள் தனக்குரிய ஒலி அளவிலிருந்து குறுகி ஒலிப்பது குறுக்கம் ஆகும். இது நான்கு வகைப்படும். அவை:

1. ஐகாரக் குறுக்கம்
2. ஒளகாரக் குறுக்கம்
3. மகரக் குறுக்கம்
4. ஆய்தக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம்

சொல்லின் முதல், இடை, இறுதியில் வரும் ஐகாரம் தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து 1 மாத்திரையாக குறைந்து ஒலித்தல். எ.கா. ஐவர், புதையல், தத்தை

ஒளகாரக் குறுக்கம்

சொல்லின் முதலில் வரும் ‘ஒள’ தனக்குரிய 2 மாத்திரையிலிருந்து 1 மாத்திரையாக குறைந்து ஒலித்தல். எ.கா., ஒளடதம், ஒளவை, வெளவால்

மகரக் குறுக்கம்

‘ம்’ தனக்குரிய ½ மாத்திரையிலிருந்து குறைந்து ¼ மாத்திரையாக ஒலித்தல். இரு சொற்களில் முதல் சொல்லின் இறுதியில் ‘ம்’ வந்து அடுத்த வரும் சொல்லின் முதலெழுத்து ‘வ’கரமாயிருப்பின் ‘ம’கரம் குறுகி ஒலிக்கும். எ.கா. ஓடும் வண்டி, பாடும் வண்டு

ஆய்தக் குறுக்கம்

ஆய்தம் தனக்குரிய ½ மாத்திரையிலிருந்து குறைந்து ¼ மாத்திரையாக ஒலித்தல். எ.கா. முள் + தீது = முஃடீது, அல் + திணை = அஃறிணை. இந்தக் காட்டுகளில் வரும் ஆய்தம் குறுகி ஒலிக்கும்.

இத்துடன் சார்பு எழுத்துகள் நிறைவுற்றன. தமிழில் ஏன் உச்சரிப்பியல் (Phonics) குறித்து விரிவாக சொல்லித்தரப்படுவதில்லை என்ற கேள்விக்கு விடை தேடும்பொழுது அதற்கு விடை எனக்கு இலக்கணத்தில் தான் கிடைத்தது. இனி வரும் நாட்களில் உச்சரிப்பியல் பற்றிப் படிப்போம்.

Monday, April 30, 2012

குற்றியல் உகரம், இகரம்

குற்றியல் உகரம்

என்ன அளபெடைகளை நன்றாக அறிந்து கொண்டாயிற்றா? குற்றியல் உகரம், குற்றியல் இகரம் இரண்டையும் என்னவென்று பார்ப்போம்.

ஒரு மாத்திரை உடைய உகரம் ½ மாத்திரையளவில் குறுகி ஒலிக்கும்போது குற்றியலுகரம் என அழைக்கப்படும். தனிக்குறிலைச் சாராது (தனிக்குறிலுக்கு அடுத்து வராது), வல்லின மெய் மீது ஏறி வரும் உகரம் (கு சு டு து பு று), சொல்லின் இறுதியில் வந்து ஓசை குறைவது “குற்றியலுகரம்” ஆகும். அதாவது தனி நெடில், குறிநெடில், குறிலிணை, வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் இவற்றில் ஒன்றினை அடுத்துச் சொல்லின் இறுதியில் நிற்கலாம்.

எ.கா. நாக்கு, காசு

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை:

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. ஆடு, மாடு, ஆறு

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. எஃகு, அஃது

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். ஏற்கனவே நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால், உயிர் மெய் எழுத்தில் உள்ள குறில் எழுத்துகள் மட்டுமே உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். ஆகவே, இது குறில் தொடர்க் குற்றியலுகரம் என அழைக்கப்படும். உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் குறைந்தது இரண்டு எழுத்துகளையாவதைத் தொடர்ந்துதான் உகரம் வரும். எ.கா. படகு, உதடு

வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. பத்து, சாக்கு

மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. பஞ்சு, பந்து

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. கொய்து, பெய்து, சார்பு

முற்றியலுகரம்
அது என்ன முற்றியலுகரம்? 10 வகை சார்பு எழுத்துகளில் இது வரவில்லையே என்றெண்ண வேண்டாம். தனிக் குறில் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வந்தால் ஓசை குறையாது. அதனால், அது முற்றியலுகரம் என அழைக்கப்படும். எ.கா. பசு, மறு

அதே போல் மெல்லின, இடையின மெய்கள் மீது ஏறி வரும் உகரம் (ஙு ஞு ணு நு மு நு யு ரு லு வு ழு ளு) முற்றியலுகரம் ஆகும். எ.கா. கணு, தும்மு, வலு, புழு.

குற்றியலிகரம்
உகரம் போலவே இகரம் சில இடங்களில் குறுகி ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும். இது இரண்டு வகைப்படும்.

1. தனிமொழிக் குற்றியலிகரம்
2. புணர்மொழிக் குற்றியலிகரம்

தனிமொழிக் குற்றியலிகரம்
மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். எ.கா. கேண்மியா, உண்மியா. இந்த சொற்களில் ‘மி’ என்ற எழுத்தில் உள்ள இகரம் ஒரு மாத்திரையில் இருந்து ½ மாத்திரையாக ஒலிக்கும்.

புணர்மொழிக் குற்றியலிகரம்
புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம். இரண்டு சொற்களில், முதலில் வரும் சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் வந்து அடுத்து வரும் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது உகரம் இகரமாகத் திரியும். அப்படித் திரிந்து வரும் இகரம் குற்றியலுகரம் போலவே ½ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். எ.கா. நாடு + யாது = நாடியாது, வரகு + யாது = வரகியாது

Sunday, April 29, 2012

அளபெடைகள்

சார்பு எழுத்துகளில் உயிர்மெய், ஆய்தம் பற்றிப் படித்தோம். அடுத்ததாக, அளபெடைகள் பற்றிப் பார்ப்போம். அளபெடை, பெயரைக்கேட்டாலே ஏதோ சாப்பிடும் உணவுவகை போல் ஒலிக்கிறதே? கார அடை, இனிப்பு அடை போல என்று தோன்றினாலும் கூட உண்மையிலேயே அளபெடைகளை இனிப்பு அடைக்கு ஒப்பாக எண்ணலாம்!!!

செய்யுளில் ஓசை குறையுமிடத்திலும் அல்லது ஓசை குறையாத இடத்தில் இனிமை கருதியும், ஓசை நயத்துக்காக அளபெடைகள் சேர்க்கப்படும். அவை இரு வகைப்படும்.

1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை

உயிரளபெடை

உயிர் அல்லது உயிர்மெய் நெடிலுக்கருகில் அதன் இனமான உயிர்க்குறில் அளபெடுத்தல் உயிரளபெடையாகும்.

ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ ஐஇ ஒளஉ

நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களேயானால், 5 குறிலுக்கு 5 நெடில்கள் இருப்பதுதானே முறையாகும். ஆனால், நெடில்கள் மட்டும் ஏன் இரண்டு அதிகமாக இருக்கிறது? தமிழில் “ஐ ஒள” இரண்டையும் கூட்டுயிர் என்பார்கள். அதாவது ஐ என்பது அஇ (அ) அய் என்றும் ஒள என்பது ஒஉ (ச்) அவ் என்றும் ஒலிப்பதைக் கேட்கலாம். நாம் ஐ என்பதை அஇ என்றும், ஒள என்பதை ஒஉ என்றும் கூட்டுயிராகக் கொள்வதாலேயே ஐ-க்கு இ-யும், ஒள-க்கு உ-வும் இனக் குறில்களாகின்றன.

வரலாறு எனும் திரைப்படத்தில் “இன்னிசை அளபெடையே” என்று ஒரு பாடல் இருக்கிறது. அது என்ன உயிரளபெடை, ஒற்றளபெடைத் தெரியும். இதுவென்ன இன்னிசை அளபெடை என்றெண்ண வேண்டாம். உயிரளபெடையை நான்கு வகைப் படுத்தலாம். அவை:

1. இயற்கை அளபெடை
2. செய்யுளிசை அளபெடை
3. இன்னிசை அளபெடை
4. சொல்லிசை அளபெடை

குறிப்பு: உங்களுக்கு அளபெடைகள் மீது அதிக ஆர்வம் தோன்றினால் திருக்குறளைப் படியுங்கள். அனைத்து விதமான அளபெடைகளையும் திருக்குறளில் பார்க்கலாம்.

இயற்கை அளபெடை

இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நிற்றல் இயற்கை அளபெடையாகும்.

எ.கா. மரூஉ, மகடூஉ, பேரூர் கிழாஅன்

செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்தல் செய்யுளிசை அளபெடையாகும்.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

யாப்பிலக்கணம் பற்றிச் சொல்லாமல் செய்யுளிசை அளபெடையை விளக்குவது சற்று சிரமம். அதனால், வேகமாகவும் எளிதாகவும் யாப்பிலக்கண அடிப்படைகளைத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது புரிந்து கொள்ள கடினமாக இருந்தால், யாப்பிலக்கணம் நன்றாகப் படித்தவுடன், மறுபடி ஒருமுறை செய்யுளிசை அளபெடையை நன்றாகப் படிக்கவும்.

யாப்பு (Prosody) – ஒரு எளிய விளக்கம்

யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். இதற்கு பாட்டு, தூக்கு, தொடர்பு, கவி, செய்யுள் என்றும் பொருள் வரும்.

உறுப்புகள்

யாப்பிலக்கண உறுப்புகள்:

1. எழுத்து (Letter/Phone)
2. அசை (Syllable/Metreme)
3. சீர் (Metrical foot)
4. அடி (Metrical line)
5. தொடை(Ornament/Ornamentation)

எழுத்து

இவ்வளவு நேரம் எழுத்திலக்கணம் பற்றிதான் நாம் படித்து வருகிறோம். ஆதலால், அதை மறுபடியும் நாம் விளக்கமாகப் பார்க்கத் தேவையில்லை.

அசை

எழுத்துகள் ஒன்றோ இரண்டோ அசைந்து இசைபட நிற்பது. சுலபமாக நினைவில் கொள்ள – எழுத்துகள் சேர்ந்தால் அசையாகும் என்று கொள்ளலாம். அவை இரண்டு வகைப்படும்.

1. நேர் அசை
2. நிரை அசை

நேர்

குறிலோ நெடிலோ தனித்தோ அல்லது ஒற்றடுத்தோ வருவது. இது தனிஉயிர் (அ) ஓருயிர் அசை என்றும் அழைக்கப்படும்.

1. தனிக்குறில் – ம
2. குறிலொற்று – மண்
3. தனி நெடில் – மா
4. நெடிலொற்று – மான்

எ.கா. ரா/ணி வந்/தாள் – தனி நெடில்/தனிக்குறில்/குறிலொற்று/நெடிலொற்று. இந்த உதாரணத்தில் நான்கு வகை நேரசைகளும் வருவதைக் கவனிக்கவும். “நேர்” என்ற சொல்லே நேரசைக்கு உதாரணமாகும் (நெடிலொற்று).

நிரை

குறிலிணை (இரண்டு குறில்கள் அடுத்தடுத்து வருதல்) அல்லது குறிநெடில் தனித்தோ அல்லது ஒற்றடுத்தோ வருவது. இது ஈருயிர் அசை என்றும் அழைக்கப்படும்.

1. குறிலிணை – புலி
2. குறிலிணையொற்று – முறம்
3. குறிநெடில் – புறா
4. குறிநெடிலொற்று – முகாம்

எ.கா. கவி/நிலா புலம்/பினாள் – குறிலிணை/குறிநெடில்/குறிலிணையொற்று/குறிநெடிலொற்று. இந்த உதாரணத்தில் நான்கு வகை நிரையசைகளும் வருவதைக் கவனிக்கவும். நிரை என்ற சொல்லே நிரையசைக்கு உதாரணமாகும் (குறிலிணை. “ரை” என்பது ர் + ஐ – ஐகாரக்குறுக்கமாதலால் “ரை” குறிலாகக் கருதப்படும்).

சீர்

அசையால் அமைவது சீர் ஆகும். இதன் வகைகள்:

1. ஓரசைச்சீர்
2. ஈரசைச்சீர்
3. மூவசைச்சீர்
4. நாலசைச்சீர்

ஓரசைச்சீர் வகைகள்

சீர் வாய்ப்பாடு எ.கா.
நாள் நேரசை கல்
மலர் நிரையசை தமிழ்
காசு நேர்பு நன்று
பிறப்பு நிரைபு உலகு


நேர்பு – நேரசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நேர்பு ஆகும். குற்றியலுகரம் சார்பு எழுத்து வகைகளில் ஒன்றாகும். அது குறித்து பின்னால் விரிவாகப் பார்ப்போம்.

நிரைபு – நிரையசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நிரைபு ஆகும்.

இப்போதைக்கு இந்த யாப்பிலக்கண அடிப்படை புரிந்தால் போதுமானது. இப்பொழுது நாம் முதலில் தொடங்கிய செய்யுளிசை அளபெடைக்குச் செல்வோம்.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

”தரூஉம்” என்பது ”தரூம்” என்றிருந்தால் நிரையாசையாகும்; அப்படியிருந்தால் அடுத்த வரும் சீர் நேரில் தொடங்கவேண்டும். ஆனால் வினைநலம் எனும் சீரில் “வினை” என்பதும் நிரையாகவே வருவதால், தளை தட்டி வெண்பா விதிகளை மீறிவிடும். 1330 குறள்களும் குறள் வெண்பாவாகும் என்பதை நினைவில் கொள்க. ஆகவை “தரூம்” என்பது ஓசை குன்றி வருவதால், “தரூஉம்” என்று அளபெடுத்து வருவதால் இது செய்யுளிசை அளபெடையாகும்.

இன்னிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகல் ஆகி, அளபெடுத்தல்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இச்செய்யுளில் “கெடுப்பதும்”, ”எடுப்பதும்” என்று வந்தாலும் பொருளும் ஓசையும் குன்றாது. ஆயினும் “து” என்னும் குறில் “தூஉம்” என்று ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுத்து வந்திருப்பதால் இன்னிசை அளபெடையாகிறது.

சொல்லிசை அளபெடை

ஒரு பெயர்ச் சொல்லை (Noun) வினை(Noun) எச்சமாக மாற்றுதல். வினை எச்சம் குறித்து சொல்லிணக்கத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

நசை என்ற பெயர்ச்சொல்லுக்கு விருப்பம் என்று பொருள். நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்ற வினை எச்சமாகி விடும். எனவே நசைஇ என்பது சொல்லிசை அளபெடையாகிறது.

ஒற்றளபெடை

ஓசை நயத்திற்காக ஒற்று (மெய்) எழுத்துகள் அளபெடுத்து வருதல்.

எ.கா. கலங்ங்கு நெஞ்சம். ‘ங்’ என்னும் ஒற்று எழுத்து அளபெடுத்திருப்பதால் ஒற்றளபெடையாகிறது. தனக்குரிய மாத்திரை அளவினை விட அதிகமாக ஒலிப்பதால் அளபெடையாகிறது.

Friday, April 27, 2012

தமிழிலக்கணப் பகுப்பான் (Tamil Grammar Parser) எழுதத் தொடங்குவது எப்படி?

நேற்று எழுத்திலக்கணத்தில் சார்பு எழுத்துகள் அறிமுகத்திற்குப் பிறகு, “மாத்திரை விளையாட்டு” விளையாடினோம். அப்போது, அந்த மாத்திரைக் கணக்கிடுவதை ஏன் தமிழிலக்கணப் பகுப்பான் தொகுப்பாக எழுதக் கூடாது என்றொரு வினா எழுப்பினேன்.

என்னடா இவன்? ஏற்கனவே தமிழிலக்கணம் பற்றிப் படிக்கவே நேரம் போதவில்லை? இதில் இவன் வேறு பகுப்பான் என்று தொடங்கி விட்டான் என்றெண்ண வேண்டாம். அது சுலபமாக எழுதக்கூடிய தொகுப்புதான். முதலில் நீங்கள் தமிழ் ஒருங்குறி (Unicode) அட்டவணையைப் படிக்க வேண்டும். அதற்கு இங்கே (http://unicode.org/charts/PDF/U0B80.pdf) சுட்டுக.

எனக்கு மிகவும் பிடித்த கணினி மொழி C# ஆகும். C# மொழியில் நான் தமிழிலக்கணப் பகுப்பான் ஒன்றை யாப்பிலக்கணத்தைப் பகுப்பதற்காக எழுதியிருக்கிறேன். இன்னும் சில வாரங்களில், அந்தப் பகுப்பானை செம்மைப் படுத்தி என் வலைப்பூவில் (blog) தரவேற்றம் (upload) செய்கிறேன்.

முதலில் உங்களுக்குப் பிடித்தமான கணினி மொழியில், ஒரு திட்டப்பணியைத் (project) தொடங்குங்கள். உயிரெழுத்துகள், மெய்யெழுத்துப் புள்ளி, அகார உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றுக்கு ஒரு அகராதி (dictionary data structure) எழுதுங்கள். ஒரு சிறிய வார்த்தையை கமாண்ட் லைன் ஆர்க்யுமெண்டாக (Command Line Argument) அனுப்பினாலே போதுமானதாக இருக்கும். அதே போல மாத்திரைகளை ஒரு அட்டவணையில் (table structure - again could be implemented using Dictionary) போடுங்கள். ஒவ்வொரு எழுத்தாகப் பகுத்து, அது எந்த வகையைச் சேர்ந்தது இனங்கண்டு அந்தந்த எண்ணிக்கை மாறிகளில் (Counter Variables) கூட்டுக. அந்த எண்ணிக்கை மாறிகளை அந்த எழுத்து வகைக்குறிய மாத்திரையோடு பெருக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக ஒவ்வொரு எழுத்து வகைக்கும் கண்டுபிடித்த மாத்திரையைக் கூட்டினால் மொத்த வார்த்தைக்கும் உண்டான மாத்திரை தெரிந்துவிடும். என்ன முயன்று பார்ப்பீர்களா?

Thursday, April 26, 2012

சார்பு எழுத்துகள் (Secondary Letters)

சார்பு எழுத்துகள் 10 வகைப்படும்

1. உயிர்மெய்
2. ஆய்தம் (அ) தனிநிலை (அ) முப்பாற்புள்ளி
3. உயிர் அளபெடை
4. ஒற்று அளபெடை
5. குற்றியல் உகரம்
6. குற்றியல் இகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஒளகாரக் குறுக்கம்
9. மகரக் குறுக்கம்
10. ஆய்தக் குறுக்கம்

அப்பாடா!!! கண்ணைக் கட்டுகிறதா? கவலை வேண்டாம். அனைத்து சார்பெழுத்துகளையும் விரிவாக உதாரணங்களுடன் பின் வரும் நாட்களில் பார்ப்போம். முதலில் கொஞ்சம் உயிர் மெய்யையும் ஆய்தத்தையும் கவனிப்போம்.

உயிர்மெய் எழுத்துகள்

உயிர் மெய் = உயிர் + மெய். ஆனால் எழுதும்போது மெய் முதலிலும் உயிர் இறுதியிலும் நிற்கும். எ.கா. க = க் (மெய்) + அ (உயிர்)

உயிர்மெய் ஒலியளவு = அதில் வரும் உயிரின் ஒலியளவேயாகும். எ.கா. க = க் + அ = 1 மாத்திரை. க் = 1/2 அ = 1, ஆகவே 1 1/2 என்று கணக்கிடக்கூடாது. அதே போல், கா = க் + ஆ = 2 மாத்திரை

ஆய்தம் (அ) தனிநிலை (அ) முப்பாற்புள்ளி

தனித்து வராது; சொல்லுக்கு முதலிலோ, இறுதியிலோ வராது. எ.கா., எஃகு

ஆய்தம் ஒலியளவு = 1/2 மாத்திரை

மாத்திரை விளையாட்டு
பிற சார்பு எழுத்துகளுக்கு போவதற்கு முன்னால், நாம் ஒரு சிறிய விளையாட்டை விளையாடலமா?

1. தமிழ் = 1 + 1 + 1/2 = 2 1/2 மாத்திரை
2. எஃகு = 1 + 1/2 + 1 = 2 1/2 மாத்திரை

இந்த விளையாட்டை நன்கு பழகிக் கொள்ளுங்கள். பின்னாளில், யாப்பிலக்கணத்தில் உதவியாயிருக்கும்.

கீழ்க்காணும் வார்த்தைகளுக்குண்டான மாத்திரையைக் கணக்கிட்டு, விடையை எழுதுங்கள்:

1. இலக்கணம்
2. எழுத்து
3. மாத்திரை
4. குறுக்கம்
5. ஆய்தம்

மென் பொருள் வல்லுநர்களே, நீங்கள் இந்த விளையாட்டையே ஏன் ஒரு தமிழ் பகுப்பானாக (parser) எழுதக்கூடாது? உங்களுக்குப் பிடித்த கணிமொழி (கணினிமொழி :)) ) யில் எழுதலாமே. என்ன தயாரா?

எழுத்திலக்கணம்

தமிழிலக்கணம் 5 வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவதான எழுத்திலக்கணம் பற்றிப் பார்ப்போம். அதற்கும் முன்பு எழுத்துகளின் ஒலி அளவைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

ஒலியளவு (அ) மாத்திரை
எழுத்துகள் ஒலிக்கும் அளவு மாத்திரை எனப்படும். ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கும் (blink of an eye) நேரத்தையோ அல்லது கை சொடுக்கும் (snap of a finger) நேரத்தையோக் குறிக்கும்.

எழுத்து வகைகள்
1. முதல் எழுத்து
2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகள் (Primary Letters) உயிரெழுத்துகள் (Vowels) பன்னிரெண்டும், மெய் எழுத்துகள் (Consonants) பதினெட்டும் முதல் எழுத்துகள் எனப்படும்.

உயிர் எழுத்துகள் (Vowels)
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஒ ஒள

உயிர் எழுத்து வகைகள்
1. குறில் (Short Vowel) - அ இ உ எ ஒ - 1 மாத்திரை
2. நெடில் (Long Vowel) - ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஒள - 2 மாத்திரை

மெய் எழுத்துகள் (Consonants)
இதற்கு ஒற்று எழுத்துகள் என்ற பெயரும் உண்டு. இவை தனித்து வராது; சொல்லுக்கு முதலில் வராது. சில வேற்று மொழி சொற்களை தமிழில் அப்படியே எழுதும்போது முதலில் வரும். எ.கா - Cricket = க்ரிக்கெட் (சிலர் கிரிக்கெட் என்றும் எழுதுவார்கள் :) )

உயிர் - 12 + மெய் - 18 = 30 முதல் எழுத்துகள்
உயிர் = ஆவி, மெய் = உடல்
மெய்/ஒற்று ஒலியளவு = 1/2 மாத்திரை

மெய் எழுத்து வகைகள்
1. வல்லினம் - க் ச் ட் த் ப் ற் - இவை அழுத்தமான ஓசையை உடையவை.
2. மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன் - இவை மென்மையான ஓசையை உடையவை.
3. இடையினம் - ய் ர் ல் வ ழ் ள் - வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடைப்பட்ட ஓசையை உடையவை.

எளிதாக உச்சரிக்க வசதியாக இருக்குமென்பதற்காக அகர எழுத்துகளைப் பயன்படுத்துவோம். அதாவது, க ச ட த ப ற வல்லினமாம், ங ஞ ண ந ம ன மெல்லினமாம், ய ர ல வ ழ ள இடையினமாம் என்று சொல்லுவார்கள்.

தமிழ் இலக்கணம் - ஒரு அறிமுகம்

இலக்கணம்


எந்த மொழியை நாம் கற்க வேண்டுமென்றாலும் முதலில் அந்த மொழியின் இலக்கணத்தை நன்றாக கற்க வேண்டும்.

தமிழ் இலக்கண வகைகள்


தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை
1. எழுத்து - Letter
2. சொல் - Word
3. பொருள் - Meaning
4. யாப்பு - Prosody
5. அணி - Method