Monday, April 30, 2012

குற்றியல் உகரம், இகரம்

குற்றியல் உகரம்

என்ன அளபெடைகளை நன்றாக அறிந்து கொண்டாயிற்றா? குற்றியல் உகரம், குற்றியல் இகரம் இரண்டையும் என்னவென்று பார்ப்போம்.

ஒரு மாத்திரை உடைய உகரம் ½ மாத்திரையளவில் குறுகி ஒலிக்கும்போது குற்றியலுகரம் என அழைக்கப்படும். தனிக்குறிலைச் சாராது (தனிக்குறிலுக்கு அடுத்து வராது), வல்லின மெய் மீது ஏறி வரும் உகரம் (கு சு டு து பு று), சொல்லின் இறுதியில் வந்து ஓசை குறைவது “குற்றியலுகரம்” ஆகும். அதாவது தனி நெடில், குறிநெடில், குறிலிணை, வல்லினம், மெல்லினம், இடையினம், ஆய்தம் இவற்றில் ஒன்றினை அடுத்துச் சொல்லின் இறுதியில் நிற்கலாம்.

எ.கா. நாக்கு, காசு

குற்றியலுகரம் ஆறு வகைப்படும். அவை:

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. ஆடு, மாடு, ஆறு

ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. எஃகு, அஃது

உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
உயிர் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். ஏற்கனவே நெடில் எழுத்துகள், நெடில் தொடர்க் குற்றியலுகரத்தில் இடம் பெற்றதால், உயிர் மெய் எழுத்தில் உள்ள குறில் எழுத்துகள் மட்டுமே உயிர்த் தொடர்க் குற்றியலுகரத்தில் வரும். ஆகவே, இது குறில் தொடர்க் குற்றியலுகரம் என அழைக்கப்படும். உயிர்த்தொடர்க்குற்றியலுகரத்தில் குறைந்தது இரண்டு எழுத்துகளையாவதைத் தொடர்ந்துதான் உகரம் வரும். எ.கா. படகு, உதடு

வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. பத்து, சாக்கு

மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. பஞ்சு, பந்து

இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின மெய் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வருதல். எ.கா. கொய்து, பெய்து, சார்பு

முற்றியலுகரம்
அது என்ன முற்றியலுகரம்? 10 வகை சார்பு எழுத்துகளில் இது வரவில்லையே என்றெண்ண வேண்டாம். தனிக் குறில் எழுத்தைத் தொடர்ந்து கு சு டு து பு று வந்தால் ஓசை குறையாது. அதனால், அது முற்றியலுகரம் என அழைக்கப்படும். எ.கா. பசு, மறு

அதே போல் மெல்லின, இடையின மெய்கள் மீது ஏறி வரும் உகரம் (ஙு ஞு ணு நு மு நு யு ரு லு வு ழு ளு) முற்றியலுகரம் ஆகும். எ.கா. கணு, தும்மு, வலு, புழு.

குற்றியலிகரம்
உகரம் போலவே இகரம் சில இடங்களில் குறுகி ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும். இது இரண்டு வகைப்படும்.

1. தனிமொழிக் குற்றியலிகரம்
2. புணர்மொழிக் குற்றியலிகரம்

தனிமொழிக் குற்றியலிகரம்
மியா என்ற அசைச்சொல்லில் ம் என்ற எழுத்தோடு சேர்ந்த இகரம் குறுகும். எ.கா. கேண்மியா, உண்மியா. இந்த சொற்களில் ‘மி’ என்ற எழுத்தில் உள்ள இகரம் ஒரு மாத்திரையில் இருந்து ½ மாத்திரையாக ஒலிக்கும்.

புணர்மொழிக் குற்றியலிகரம்
புணர்மொழிக் குற்றியலிகரம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது உருவாகும் குற்றியலிகரம். இரண்டு சொற்களில், முதலில் வரும் சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் வந்து அடுத்து வரும் சொல் ‘ய’ என்ற எழுத்தில் தொடங்கும்போது உகரம் இகரமாகத் திரியும். அப்படித் திரிந்து வரும் இகரம் குற்றியலுகரம் போலவே ½ மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கும். எ.கா. நாடு + யாது = நாடியாது, வரகு + யாது = வரகியாது

Sunday, April 29, 2012

அளபெடைகள்

சார்பு எழுத்துகளில் உயிர்மெய், ஆய்தம் பற்றிப் படித்தோம். அடுத்ததாக, அளபெடைகள் பற்றிப் பார்ப்போம். அளபெடை, பெயரைக்கேட்டாலே ஏதோ சாப்பிடும் உணவுவகை போல் ஒலிக்கிறதே? கார அடை, இனிப்பு அடை போல என்று தோன்றினாலும் கூட உண்மையிலேயே அளபெடைகளை இனிப்பு அடைக்கு ஒப்பாக எண்ணலாம்!!!

செய்யுளில் ஓசை குறையுமிடத்திலும் அல்லது ஓசை குறையாத இடத்தில் இனிமை கருதியும், ஓசை நயத்துக்காக அளபெடைகள் சேர்க்கப்படும். அவை இரு வகைப்படும்.

1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை

உயிரளபெடை

உயிர் அல்லது உயிர்மெய் நெடிலுக்கருகில் அதன் இனமான உயிர்க்குறில் அளபெடுத்தல் உயிரளபெடையாகும்.

ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஓஒ ஐஇ ஒளஉ

நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களேயானால், 5 குறிலுக்கு 5 நெடில்கள் இருப்பதுதானே முறையாகும். ஆனால், நெடில்கள் மட்டும் ஏன் இரண்டு அதிகமாக இருக்கிறது? தமிழில் “ஐ ஒள” இரண்டையும் கூட்டுயிர் என்பார்கள். அதாவது ஐ என்பது அஇ (அ) அய் என்றும் ஒள என்பது ஒஉ (ச்) அவ் என்றும் ஒலிப்பதைக் கேட்கலாம். நாம் ஐ என்பதை அஇ என்றும், ஒள என்பதை ஒஉ என்றும் கூட்டுயிராகக் கொள்வதாலேயே ஐ-க்கு இ-யும், ஒள-க்கு உ-வும் இனக் குறில்களாகின்றன.

வரலாறு எனும் திரைப்படத்தில் “இன்னிசை அளபெடையே” என்று ஒரு பாடல் இருக்கிறது. அது என்ன உயிரளபெடை, ஒற்றளபெடைத் தெரியும். இதுவென்ன இன்னிசை அளபெடை என்றெண்ண வேண்டாம். உயிரளபெடையை நான்கு வகைப் படுத்தலாம். அவை:

1. இயற்கை அளபெடை
2. செய்யுளிசை அளபெடை
3. இன்னிசை அளபெடை
4. சொல்லிசை அளபெடை

குறிப்பு: உங்களுக்கு அளபெடைகள் மீது அதிக ஆர்வம் தோன்றினால் திருக்குறளைப் படியுங்கள். அனைத்து விதமான அளபெடைகளையும் திருக்குறளில் பார்க்கலாம்.

இயற்கை அளபெடை

இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நிற்றல் இயற்கை அளபெடையாகும்.

எ.கா. மரூஉ, மகடூஉ, பேரூர் கிழாஅன்

செய்யுளிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையும்போது அளபெடுத்து ஓசையை நிறைவு செய்தல் செய்யுளிசை அளபெடையாகும்.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

யாப்பிலக்கணம் பற்றிச் சொல்லாமல் செய்யுளிசை அளபெடையை விளக்குவது சற்று சிரமம். அதனால், வேகமாகவும் எளிதாகவும் யாப்பிலக்கண அடிப்படைகளைத் தொட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது. இப்போது புரிந்து கொள்ள கடினமாக இருந்தால், யாப்பிலக்கணம் நன்றாகப் படித்தவுடன், மறுபடி ஒருமுறை செய்யுளிசை அளபெடையை நன்றாகப் படிக்கவும்.

யாப்பு (Prosody) – ஒரு எளிய விளக்கம்

யாப்பு என்றால் கட்டுதல் என்று பொருள். இதற்கு பாட்டு, தூக்கு, தொடர்பு, கவி, செய்யுள் என்றும் பொருள் வரும்.

உறுப்புகள்

யாப்பிலக்கண உறுப்புகள்:

1. எழுத்து (Letter/Phone)
2. அசை (Syllable/Metreme)
3. சீர் (Metrical foot)
4. அடி (Metrical line)
5. தொடை(Ornament/Ornamentation)

எழுத்து

இவ்வளவு நேரம் எழுத்திலக்கணம் பற்றிதான் நாம் படித்து வருகிறோம். ஆதலால், அதை மறுபடியும் நாம் விளக்கமாகப் பார்க்கத் தேவையில்லை.

அசை

எழுத்துகள் ஒன்றோ இரண்டோ அசைந்து இசைபட நிற்பது. சுலபமாக நினைவில் கொள்ள – எழுத்துகள் சேர்ந்தால் அசையாகும் என்று கொள்ளலாம். அவை இரண்டு வகைப்படும்.

1. நேர் அசை
2. நிரை அசை

நேர்

குறிலோ நெடிலோ தனித்தோ அல்லது ஒற்றடுத்தோ வருவது. இது தனிஉயிர் (அ) ஓருயிர் அசை என்றும் அழைக்கப்படும்.

1. தனிக்குறில் – ம
2. குறிலொற்று – மண்
3. தனி நெடில் – மா
4. நெடிலொற்று – மான்

எ.கா. ரா/ணி வந்/தாள் – தனி நெடில்/தனிக்குறில்/குறிலொற்று/நெடிலொற்று. இந்த உதாரணத்தில் நான்கு வகை நேரசைகளும் வருவதைக் கவனிக்கவும். “நேர்” என்ற சொல்லே நேரசைக்கு உதாரணமாகும் (நெடிலொற்று).

நிரை

குறிலிணை (இரண்டு குறில்கள் அடுத்தடுத்து வருதல்) அல்லது குறிநெடில் தனித்தோ அல்லது ஒற்றடுத்தோ வருவது. இது ஈருயிர் அசை என்றும் அழைக்கப்படும்.

1. குறிலிணை – புலி
2. குறிலிணையொற்று – முறம்
3. குறிநெடில் – புறா
4. குறிநெடிலொற்று – முகாம்

எ.கா. கவி/நிலா புலம்/பினாள் – குறிலிணை/குறிநெடில்/குறிலிணையொற்று/குறிநெடிலொற்று. இந்த உதாரணத்தில் நான்கு வகை நிரையசைகளும் வருவதைக் கவனிக்கவும். நிரை என்ற சொல்லே நிரையசைக்கு உதாரணமாகும் (குறிலிணை. “ரை” என்பது ர் + ஐ – ஐகாரக்குறுக்கமாதலால் “ரை” குறிலாகக் கருதப்படும்).

சீர்

அசையால் அமைவது சீர் ஆகும். இதன் வகைகள்:

1. ஓரசைச்சீர்
2. ஈரசைச்சீர்
3. மூவசைச்சீர்
4. நாலசைச்சீர்

ஓரசைச்சீர் வகைகள்

சீர் வாய்ப்பாடு எ.கா.
நாள் நேரசை கல்
மலர் நிரையசை தமிழ்
காசு நேர்பு நன்று
பிறப்பு நிரைபு உலகு


நேர்பு – நேரசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நேர்பு ஆகும். குற்றியலுகரம் சார்பு எழுத்து வகைகளில் ஒன்றாகும். அது குறித்து பின்னால் விரிவாகப் பார்ப்போம்.

நிரைபு – நிரையசையுடன் குற்றியலுகரம் சேர்ந்து நிரைபு ஆகும்.

இப்போதைக்கு இந்த யாப்பிலக்கண அடிப்படை புரிந்தால் போதுமானது. இப்பொழுது நாம் முதலில் தொடங்கிய செய்யுளிசை அளபெடைக்குச் செல்வோம்.

துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்

”தரூஉம்” என்பது ”தரூம்” என்றிருந்தால் நிரையாசையாகும்; அப்படியிருந்தால் அடுத்த வரும் சீர் நேரில் தொடங்கவேண்டும். ஆனால் வினைநலம் எனும் சீரில் “வினை” என்பதும் நிரையாகவே வருவதால், தளை தட்டி வெண்பா விதிகளை மீறிவிடும். 1330 குறள்களும் குறள் வெண்பாவாகும் என்பதை நினைவில் கொள்க. ஆகவை “தரூம்” என்பது ஓசை குன்றி வருவதால், “தரூஉம்” என்று அளபெடுத்து வருவதால் இது செய்யுளிசை அளபெடையாகும்.

இன்னிசை அளபெடை

செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகல் ஆகி, அளபெடுத்தல்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

இச்செய்யுளில் “கெடுப்பதும்”, ”எடுப்பதும்” என்று வந்தாலும் பொருளும் ஓசையும் குன்றாது. ஆயினும் “து” என்னும் குறில் “தூஉம்” என்று ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுத்து வந்திருப்பதால் இன்னிசை அளபெடையாகிறது.

சொல்லிசை அளபெடை

ஒரு பெயர்ச் சொல்லை (Noun) வினை(Noun) எச்சமாக மாற்றுதல். வினை எச்சம் குறித்து சொல்லிணக்கத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்

நசை என்ற பெயர்ச்சொல்லுக்கு விருப்பம் என்று பொருள். நசைஇ என்று அளபெடை ஆக்கினால், விரும்பி என்ற வினை எச்சமாகி விடும். எனவே நசைஇ என்பது சொல்லிசை அளபெடையாகிறது.

ஒற்றளபெடை

ஓசை நயத்திற்காக ஒற்று (மெய்) எழுத்துகள் அளபெடுத்து வருதல்.

எ.கா. கலங்ங்கு நெஞ்சம். ‘ங்’ என்னும் ஒற்று எழுத்து அளபெடுத்திருப்பதால் ஒற்றளபெடையாகிறது. தனக்குரிய மாத்திரை அளவினை விட அதிகமாக ஒலிப்பதால் அளபெடையாகிறது.

Friday, April 27, 2012

தமிழிலக்கணப் பகுப்பான் (Tamil Grammar Parser) எழுதத் தொடங்குவது எப்படி?

நேற்று எழுத்திலக்கணத்தில் சார்பு எழுத்துகள் அறிமுகத்திற்குப் பிறகு, “மாத்திரை விளையாட்டு” விளையாடினோம். அப்போது, அந்த மாத்திரைக் கணக்கிடுவதை ஏன் தமிழிலக்கணப் பகுப்பான் தொகுப்பாக எழுதக் கூடாது என்றொரு வினா எழுப்பினேன்.

என்னடா இவன்? ஏற்கனவே தமிழிலக்கணம் பற்றிப் படிக்கவே நேரம் போதவில்லை? இதில் இவன் வேறு பகுப்பான் என்று தொடங்கி விட்டான் என்றெண்ண வேண்டாம். அது சுலபமாக எழுதக்கூடிய தொகுப்புதான். முதலில் நீங்கள் தமிழ் ஒருங்குறி (Unicode) அட்டவணையைப் படிக்க வேண்டும். அதற்கு இங்கே (http://unicode.org/charts/PDF/U0B80.pdf) சுட்டுக.

எனக்கு மிகவும் பிடித்த கணினி மொழி C# ஆகும். C# மொழியில் நான் தமிழிலக்கணப் பகுப்பான் ஒன்றை யாப்பிலக்கணத்தைப் பகுப்பதற்காக எழுதியிருக்கிறேன். இன்னும் சில வாரங்களில், அந்தப் பகுப்பானை செம்மைப் படுத்தி என் வலைப்பூவில் (blog) தரவேற்றம் (upload) செய்கிறேன்.

முதலில் உங்களுக்குப் பிடித்தமான கணினி மொழியில், ஒரு திட்டப்பணியைத் (project) தொடங்குங்கள். உயிரெழுத்துகள், மெய்யெழுத்துப் புள்ளி, அகார உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றுக்கு ஒரு அகராதி (dictionary data structure) எழுதுங்கள். ஒரு சிறிய வார்த்தையை கமாண்ட் லைன் ஆர்க்யுமெண்டாக (Command Line Argument) அனுப்பினாலே போதுமானதாக இருக்கும். அதே போல மாத்திரைகளை ஒரு அட்டவணையில் (table structure - again could be implemented using Dictionary) போடுங்கள். ஒவ்வொரு எழுத்தாகப் பகுத்து, அது எந்த வகையைச் சேர்ந்தது இனங்கண்டு அந்தந்த எண்ணிக்கை மாறிகளில் (Counter Variables) கூட்டுக. அந்த எண்ணிக்கை மாறிகளை அந்த எழுத்து வகைக்குறிய மாத்திரையோடு பெருக்கிக் கொள்ளுங்கள். இறுதியாக ஒவ்வொரு எழுத்து வகைக்கும் கண்டுபிடித்த மாத்திரையைக் கூட்டினால் மொத்த வார்த்தைக்கும் உண்டான மாத்திரை தெரிந்துவிடும். என்ன முயன்று பார்ப்பீர்களா?

Thursday, April 26, 2012

சார்பு எழுத்துகள் (Secondary Letters)

சார்பு எழுத்துகள் 10 வகைப்படும்

1. உயிர்மெய்
2. ஆய்தம் (அ) தனிநிலை (அ) முப்பாற்புள்ளி
3. உயிர் அளபெடை
4. ஒற்று அளபெடை
5. குற்றியல் உகரம்
6. குற்றியல் இகரம்
7. ஐகாரக் குறுக்கம்
8. ஒளகாரக் குறுக்கம்
9. மகரக் குறுக்கம்
10. ஆய்தக் குறுக்கம்

அப்பாடா!!! கண்ணைக் கட்டுகிறதா? கவலை வேண்டாம். அனைத்து சார்பெழுத்துகளையும் விரிவாக உதாரணங்களுடன் பின் வரும் நாட்களில் பார்ப்போம். முதலில் கொஞ்சம் உயிர் மெய்யையும் ஆய்தத்தையும் கவனிப்போம்.

உயிர்மெய் எழுத்துகள்

உயிர் மெய் = உயிர் + மெய். ஆனால் எழுதும்போது மெய் முதலிலும் உயிர் இறுதியிலும் நிற்கும். எ.கா. க = க் (மெய்) + அ (உயிர்)

உயிர்மெய் ஒலியளவு = அதில் வரும் உயிரின் ஒலியளவேயாகும். எ.கா. க = க் + அ = 1 மாத்திரை. க் = 1/2 அ = 1, ஆகவே 1 1/2 என்று கணக்கிடக்கூடாது. அதே போல், கா = க் + ஆ = 2 மாத்திரை

ஆய்தம் (அ) தனிநிலை (அ) முப்பாற்புள்ளி

தனித்து வராது; சொல்லுக்கு முதலிலோ, இறுதியிலோ வராது. எ.கா., எஃகு

ஆய்தம் ஒலியளவு = 1/2 மாத்திரை

மாத்திரை விளையாட்டு
பிற சார்பு எழுத்துகளுக்கு போவதற்கு முன்னால், நாம் ஒரு சிறிய விளையாட்டை விளையாடலமா?

1. தமிழ் = 1 + 1 + 1/2 = 2 1/2 மாத்திரை
2. எஃகு = 1 + 1/2 + 1 = 2 1/2 மாத்திரை

இந்த விளையாட்டை நன்கு பழகிக் கொள்ளுங்கள். பின்னாளில், யாப்பிலக்கணத்தில் உதவியாயிருக்கும்.

கீழ்க்காணும் வார்த்தைகளுக்குண்டான மாத்திரையைக் கணக்கிட்டு, விடையை எழுதுங்கள்:

1. இலக்கணம்
2. எழுத்து
3. மாத்திரை
4. குறுக்கம்
5. ஆய்தம்

மென் பொருள் வல்லுநர்களே, நீங்கள் இந்த விளையாட்டையே ஏன் ஒரு தமிழ் பகுப்பானாக (parser) எழுதக்கூடாது? உங்களுக்குப் பிடித்த கணிமொழி (கணினிமொழி :)) ) யில் எழுதலாமே. என்ன தயாரா?

எழுத்திலக்கணம்

தமிழிலக்கணம் 5 வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவதான எழுத்திலக்கணம் பற்றிப் பார்ப்போம். அதற்கும் முன்பு எழுத்துகளின் ஒலி அளவைப்பற்றி அறிந்து கொள்வது அவசியம்.

ஒலியளவு (அ) மாத்திரை
எழுத்துகள் ஒலிக்கும் அளவு மாத்திரை எனப்படும். ஒரு மாத்திரை என்பது கண் இமைக்கும் (blink of an eye) நேரத்தையோ அல்லது கை சொடுக்கும் (snap of a finger) நேரத்தையோக் குறிக்கும்.

எழுத்து வகைகள்
1. முதல் எழுத்து
2. சார்பு எழுத்து

முதல் எழுத்துகள் (Primary Letters) உயிரெழுத்துகள் (Vowels) பன்னிரெண்டும், மெய் எழுத்துகள் (Consonants) பதினெட்டும் முதல் எழுத்துகள் எனப்படும்.

உயிர் எழுத்துகள் (Vowels)
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஒ ஒள

உயிர் எழுத்து வகைகள்
1. குறில் (Short Vowel) - அ இ உ எ ஒ - 1 மாத்திரை
2. நெடில் (Long Vowel) - ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஒள - 2 மாத்திரை

மெய் எழுத்துகள் (Consonants)
இதற்கு ஒற்று எழுத்துகள் என்ற பெயரும் உண்டு. இவை தனித்து வராது; சொல்லுக்கு முதலில் வராது. சில வேற்று மொழி சொற்களை தமிழில் அப்படியே எழுதும்போது முதலில் வரும். எ.கா - Cricket = க்ரிக்கெட் (சிலர் கிரிக்கெட் என்றும் எழுதுவார்கள் :) )

உயிர் - 12 + மெய் - 18 = 30 முதல் எழுத்துகள்
உயிர் = ஆவி, மெய் = உடல்
மெய்/ஒற்று ஒலியளவு = 1/2 மாத்திரை

மெய் எழுத்து வகைகள்
1. வல்லினம் - க் ச் ட் த் ப் ற் - இவை அழுத்தமான ஓசையை உடையவை.
2. மெல்லினம் - ங் ஞ் ண் ந் ம் ன் - இவை மென்மையான ஓசையை உடையவை.
3. இடையினம் - ய் ர் ல் வ ழ் ள் - வல்லினத்துக்கும் மெல்லினத்துக்கும் இடைப்பட்ட ஓசையை உடையவை.

எளிதாக உச்சரிக்க வசதியாக இருக்குமென்பதற்காக அகர எழுத்துகளைப் பயன்படுத்துவோம். அதாவது, க ச ட த ப ற வல்லினமாம், ங ஞ ண ந ம ன மெல்லினமாம், ய ர ல வ ழ ள இடையினமாம் என்று சொல்லுவார்கள்.

தமிழ் இலக்கணம் - ஒரு அறிமுகம்

இலக்கணம்


எந்த மொழியை நாம் கற்க வேண்டுமென்றாலும் முதலில் அந்த மொழியின் இலக்கணத்தை நன்றாக கற்க வேண்டும்.

தமிழ் இலக்கண வகைகள்


தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை
1. எழுத்து - Letter
2. சொல் - Word
3. பொருள் - Meaning
4. யாப்பு - Prosody
5. அணி - Method