Wednesday, May 2, 2012

குறுக்கம்

எழுத்துகள் தனக்குரிய ஒலி அளவிலிருந்து குறுகி ஒலிப்பது குறுக்கம் ஆகும். இது நான்கு வகைப்படும். அவை:

1. ஐகாரக் குறுக்கம்
2. ஒளகாரக் குறுக்கம்
3. மகரக் குறுக்கம்
4. ஆய்தக் குறுக்கம்

ஐகாரக் குறுக்கம்

சொல்லின் முதல், இடை, இறுதியில் வரும் ஐகாரம் தனக்குரிய 2 மாத்திரை அளவிலிருந்து 1 மாத்திரையாக குறைந்து ஒலித்தல். எ.கா. ஐவர், புதையல், தத்தை

ஒளகாரக் குறுக்கம்

சொல்லின் முதலில் வரும் ‘ஒள’ தனக்குரிய 2 மாத்திரையிலிருந்து 1 மாத்திரையாக குறைந்து ஒலித்தல். எ.கா., ஒளடதம், ஒளவை, வெளவால்

மகரக் குறுக்கம்

‘ம்’ தனக்குரிய ½ மாத்திரையிலிருந்து குறைந்து ¼ மாத்திரையாக ஒலித்தல். இரு சொற்களில் முதல் சொல்லின் இறுதியில் ‘ம்’ வந்து அடுத்த வரும் சொல்லின் முதலெழுத்து ‘வ’கரமாயிருப்பின் ‘ம’கரம் குறுகி ஒலிக்கும். எ.கா. ஓடும் வண்டி, பாடும் வண்டு

ஆய்தக் குறுக்கம்

ஆய்தம் தனக்குரிய ½ மாத்திரையிலிருந்து குறைந்து ¼ மாத்திரையாக ஒலித்தல். எ.கா. முள் + தீது = முஃடீது, அல் + திணை = அஃறிணை. இந்தக் காட்டுகளில் வரும் ஆய்தம் குறுகி ஒலிக்கும்.

இத்துடன் சார்பு எழுத்துகள் நிறைவுற்றன. தமிழில் ஏன் உச்சரிப்பியல் (Phonics) குறித்து விரிவாக சொல்லித்தரப்படுவதில்லை என்ற கேள்விக்கு விடை தேடும்பொழுது அதற்கு விடை எனக்கு இலக்கணத்தில் தான் கிடைத்தது. இனி வரும் நாட்களில் உச்சரிப்பியல் பற்றிப் படிப்போம்.